உலகில் பல விடயங்கள் நாம் எதிர்பார்க்க முடியாதவையாக,எமது எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்குபவையாக நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சிலவற்றிற்கு எம்மால் ஏதோவொரு வகையில் விளக்கங்களை அளிக்க முடிந்தாலும், பல எமது தேடல்களுக்கும், புரிதல்களுக்கும் அப்பாற்பட்டவையாகவே இருந்து வருகின்றன. உலகெங்கும் தற்போது அதிகளவில் பெருகி வருகின்ற ஓட்டிசம் எனும் நிலைமையைப் பற்றி எண்ணும்பொழுது இவ்வாறான ஒரு சிந்தனையே ஏற்படுகிறது. ஓட்டிசமானது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஏன் இவ்வாறு வகைதொகையின்றி அதிகரித்துச் செல்கின்றது என்பதற்குத் திருப்தியளிக்கக்கூடிய விடைகள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஓட்டிசம் உருவாவதற்கான காரணங்களாக முன்வைக்கப்படும் எண்ணக்கருக்களுள் ஒன்றிரண்டைத் தவிர, ஏனையவை இன்றுவரையில் சந்தேகத்திற்கிடமற்ற வகையில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவும் இல்லை. ஆயினும், ஓட்டிசம் உலகம் முழுவதும், வளர்முக நாடுகள் உட்பட, அதிகரித்துச் செல்கின்றது என்றும், சராசரியாக நூறு குழந்தைகளில் ஒருவர் இந்த நிலைமையினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது
ஓட்டிசம் எவ்வாறு உருவாகின்றது என்பது தெளிவில்லாமல் இருந்தாலும், அது மூளை மற்றும் நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய ஒரு நிலைமை என்பதையும், அது ஒவ்வொரு பிள்ளையிலும் வெவ்வேறுவிதமாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பதையும் தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதுபோல ஓட்டிசம் நிலை ஏற்பட்டிருப்பத்தினை நேரகாலத்துக்கே அடையாளம் கண்டு, பொருத்தமான தலையீடுகளை மேற்கொள்வதன் மூலம் அதனது தாக்கத்தைப் பெருமளவில் குறைக்கலாம் என்பதும், சிலவேளைகளில் அதனை முற்றுமுழுதாகவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. மறுதலையாக, ஓட்டிச இயல்புகள் அதிகமாக இருக்கும் பிள்ளைகள் மிக மிக மெதுவாகவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களைக் காட்டுவதனையும், அவர்கள் வளர்ந்ததன் பின்பும் தனித்து வாழும் திறனற்றவர்களாக, நீண்டகாலப் பராமரிப்பு மற்றும் தலையீடுகள் தேவைப்படும் நபர்களாக இருந்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற பொழுது ஓட்டிசம் என்பது தீவிரமான மற்றும் நீண்டகால தலையீடுகளை வேண்டிநிற்கும் ஒரு நிலைமையாகவே இன்றுவரை இருக்கின்றது.
ஓட்டிச இயல்புகள் பற்றிய அறியாமையும், ஓட்டிசம் தொடர்பாக பெற்றோருக்கு இருக்கும் பொதுவான மறுப்புணர்வும் அந்த நிலைமையை அதன் ஆரம்ப கட்டங்களில் அடையாளம் காண்பதனை மறைத்து விடுகின்றன. ஓட்டிசம் என்பதனை வெறுமனே பேச்சு மற்றும் மொழி விருத்தியுடன் தொடர்புடைய, கதை வருவதற்குப் பிந்தும் ஒரு நிலைமையாக மட்டும் புரிந்து கொள்வதும் இவ்வாறு ஆரம்ப காலங்களில் அடையாளங்கள் காணாது தவற விடுவதற்கான மற்றுமோர் காரணியாக அமைந்து விடுகின்றது. ஆயினும், ஓட்டிசம் என்பதனைச் சற்று நெருக்கமாக அவதானித்தால், அது பேச்சு மற்றும் மொழி விருத்தியில் ஏற்படும் பின்னடைவு என்பதற்கும் அப்பாற்பட்டு, சமூகத் தொடர்பாடலில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள், உணர்திறன் மற்றும் புலன்வாங்கல்களில் உருவாகியிருக்கும் மாற்றங்கள், தம்மைச் சுற்றி நடக்கும் விடயங்களை உள்வாங்குவதிலும் அவற்றிற்கு எதிர்வினையாற்றுவதிலும் காட்டுகின்ற வேறுபாடுகள், சில விடயங்கள் மீண்டும் மீண்டும் ஒரேவிதமாக நடைபெறவேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு மனநிலை, இவை அனைத்திற்கும் மேலாக ஓட்டிசத்தினால் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைப்படுத்தல்களினால் உண்டாகும் சலிப்பு மற்றும் விரக்தியின் வெளிப்பாடுகள் போன்ற பல்வேறு இயல்புகள் ஓட்டிசம் எனும் நிலைமையின் வெளிப்பாடுகளாக, அதன் பல்வகைமைத் தன்மையைக் காட்டுபவையாக அமைந்து இருப்பதனைக் காணலாம். சுருங்கக் கூறின் ஓட்டிசம் என்பதனை பிள்ளை இன்னமும் கதைக்கவில்லை என்ற முறைப்பாட்டோடு சுருக்கிக் கொள்ளக் கூடாது. கதைக்கப் பிந்துதல் என்பது அதன் ஓர் இயல்பு மட்டுமே.
ஓட்டிசத்தின் அடிப்படையான இயல்புகளுக்கு அப்பாற்பட்டு, அதனோடு இணைந்து உருவாகியிருக்கின்ற ஏனைய நிலைமைகள் மற்றும் கோளாறுகளால் ஏற்படுத்தப்படும் இடைவினைகளும் ஓட்டிச நிலைமையின் வெளிப்பாடுகள், அதன் முன்னேற்றப்பாதை, மற்றும் அதன் ஒட்டுமொத்தமான பேறுகள் ஆகியவற்றைச் சிக்கல் தன்மை நிறைந்தவையாக மாற்றி விடுகின்றன. உதாரணமாக ஓட்டிசம் ஏற்பட்டிருக்கும் பிள்ளைகளில் ஏனைய மன உடல் விருத்திக் குறைபாடுகளும் இணைந்து காணப்பட்டால், அல்லது அவர்களது புத்திக்கூர்மையானது அவர்களது வயதையொத்த ஏனைய பிள்ளைகளிலும் பார்க்கக் குறைவான ஒரு அளவில் இருந்தால், அவை அந்தப் பிள்ளைகளுக்கான ஆரம்பகாலத் தீவிரமான தலையீடுகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அதுபோல, ஓட்டிசத்தோடு இணைந்திருக்கும் ஏனைய விருத்திக் கோளாறுகளான கவனக்குறைபாடு மற்றும் அதீத துடிப்பாட்ட நிலைமை, வாசிப்பு மற்றும் எழுதுவதில் உள்ள இடர்பாடு, அசைவியக்கங்கள் மற்றும் இலக்கு நோக்கிய தசை இயக்கங்கள் ஆகியவற்றில் காணப்படும் கோளாறுகள் போன்றவை ஓட்டிச இயல்புகளிலும், அவற்றிற்கான பயிற்சிகளிலும் மறை ஆதிக்கம் செலுத்தலாம். இவற்றுடன், ஓட்டிசத்தோடு இணைந்து காணப்படக்கூடிய வலிப்பு நோய், குடல் சம்பந்தமான நோய்கள், மற்றும் நித்திரைக் கோளாறுகள் போன்றனவும் ஓட்டிசம் உடைய பிள்ளைகளில் மேலதிகமான பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகின்றன.
ஓட்டிசமுடைய பிள்ளைகளால் வெளிக்காட்டப்படும் பல நடத்தைப் பிரச்சினைகளுக்கு அவர்களது புலன்வாங்கல் மற்றும் உணர்திறனில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகளும் கணிசமான பங்கினை வகிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. புலன்களினூடாகத் தூண்டல்கள் உள்வாங்கப்படும் விதம், மற்றும் அவை அதீதமாக உணரப்படுகின்றனவா அல்லது மந்தமாக உணரப்படுகின்றனவா என்பதனைப் பொறுத்து அவற்றிற்கான எதிர்வினைகள் ஏற்படுகின்றன. அவை ஓட்டிசம் உடைய பிள்ளைகளின் அன்றாட அலுவல்களான தற்சுகாதாரம் பேணல், உணவுப் பழக்கம், ஆடைத் தெரிவு, விருப்பத்திற்குரிய விளையாட்டுப் பொருட்கள், தெரிவு செய்யப்படும் பௌதிகச் சூழல் என்பவற்றோடு, அவர்களது அசைவுகள், ஒலியெழுப்புகைகள், உணர்வு வெளிப்பாடுகள் போன்ற ஏனைய பல விடயங்களிலும் பிரதிபலிக்கின்றன. அதுபோல, ஓட்டிசம் உடைய பிள்ளைகளில் காணப்படும் தொடர்பாடல் கட்டுப்பாடுகளும் அவர்களது பிரச்சினைகளை ஏற்படுத்தும் நடத்தைகளுக்குக் காளாய் இருப்பதனைக் காணலாம். பொதுவாக, ஓட்டிசமுடைய பிள்ளைகள் வெளிப்பார்வைக்குத் தம்மைச் சூழ நடக்கும் விடயங்களுக்கு அக்கறை செலுத்தாமல் இருப்பவர்கள் போல் காணப்பட்டாலும், அநேகமான வேளைகளில் அவர்கள் தமது சூழலில் நடப்பவற்றைத் துல்லியமாகக் கிரகித்து எதிர்வினையாற்றுபவர்களாக இருப்பதனை அவதானிக்கலாம். இந்த எதிர்வினைகள் அவர்களது மொழி மற்றும் சமூகத் தொடர்பாடல்களில் காணப்படும் கட்டுப்பாடுகளினால், வழக்கிற்கு மாறானவையாகத் தோற்றமளித்து விடலாம்.
ஓட்டிசமுடைய ஒவ்வொரு பிள்ளைகளும் தனித்துவமான இயல்புகளையும், கட்டுப்பாடுகளையும், திறன்களையும் கொண்டிருப்பதனால், அவர்கள் அனைவருக்கும் ஒரேவிதமான பயிற்சிகளை வழங்குவது, அல்லது கற்றல் கற்பித்தல் முறைமையை உபயோகிப்பது என்பது சாத்தியமற்றுப் போகின்றது. அதனால், ஒவ்வொரு பிள்ளையையும் தனித்தனியாகக் கணிப்பீடு செய்து, அவர்களது இயலுமைகள் மற்றும் இயலாமைகளை அடையாளங் கண்டு, அவர்கள் இதுவரை காலமும் சரியாக அல்லது தவறாகக் கற்றுக் கொண்டிருக்கும் நடத்தைகளைக் கருத்திலெடுத்து அவர்களுக்குத் தேவைப்படும் பிரத்தியேகமான பயிற்சிகளை வடிவமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அவ்வாறு வடிவமைத்த பயிற்சிகளில் அவர்களை ஈடுபடுத்தி, எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதுதான் ஓட்டிசத்திற்கான ஆரம்ப தலையீடுகளின் இலக்காக இருக்கின்றது.
ஓட்டிச நிலைமையானது மூளையின் பல்வேறு தொழிற்பாடுகளில் கணிசமானளவு மாற்றங்களை ஏற்படுத்திவிடுவதனால், அவற்றிற்கான இடையீடுகளும் பல்வேறு தளங்களில், பல்வேறு கோணங்களில், பல்வேறு சிகிச்சையாளர்களால் நடைபெற வேண்டியது அவசியமானதாகின்றது. ஆயினும், அவை யாவும் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் நடைபெறவேண்டியது அவசியம். இந்த பின்புலத்தில்தான் ஓட்டிசத்திற்கான இடையீடுகள் தனித்துவமானவையாகவும், பல்வேறு சிகிச்சையாளர்களால் மேற்கொள்ளப்பட வேண்டியவையாகவும் இருக்கின்றமையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வகையில் கூறப்போனால் ஓட்டிசத்திற்கான இடையீடுகள் அதிக அளவு (பயிற்சி பெற்ற, சான்றளிக்கப்பட்ட) மனித வலுவை வேண்டி நிற்கின்றது. துரதிஷ்டவசமாக இதனைப் பலர் புரிந்து கொள்வதில்லை.
ஓட்டிச நிலைமைகளை உடைய பிள்ளைகளுக்கான பல சிகிச்சைகள் ஒரு பிள்ளைக்கு ஒரு சிகிச்சையாளர் எனும் அடிப்படையில் வழங்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. ஓட்டிச இடையீடுகளில் குழுவாகப் பயிற்றுவிக்கும், மற்றும் குழுவாகச் சிகிச்சையளிக்கும் நடைமுறைகள் இருந்தாலும், அவை மிகக் குறைந்த அளவிலேயே இடம்பெறுகின்றன. அத்துடன் பிள்ளைகளில் ஒவ்வொரு சிறிய மாற்றங்களை உருவாக்குவதற்கும், அவ்வாறு உருவான மாற்றங்கள் நிலைத்து நிற்பதனை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு நீண்ட காலம் பயிற்சியளிக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது. எனவே, போதியளவு மனிதவளங்கள் இல்லாத ஒரு சூழமைவில், அல்லது அவ்வாறு மனித வளங்களை ஒதுக்க முடியாத ஒரு யாதார்த்தத்தில் ஓட்டிசமுடைய பிள்ளைகளுக்கான சிகிச்சைகளும், பயிற்சிகளும் அரைகுறையானவையாகப் போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதற்கும் மேலாக, தேவைப்படும் சிகிச்சைகளைப் பெற்று கொள்வதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதொரு நிலைமையும் எழுந்து விடுகின்றது.
தமது பிள்ளைக்கு ஓட்டிச இயல்புகள் இருக்கின்றன என்பதனை அறிந்து கொள்ளும் பெற்றோர்கள் அதனை விரைவாகச் சரி செய்துவிடத் துடிப்பதும், எப்பாடுபட்டாவது, எங்கு கொண்டு சென்றாவது பிள்ளையைக் குணப்படுத்திவிட வேண்டும் என்று விரும்புவதும் இயல்பானது. புரிந்துகொள்ளக் கூடியது. ஆயினும், ஓட்டிசம் என்பது வழக்கமான விருத்தியிலிருந்து மாறுபட்ட ஒரு நிலை என்பதனையும், அது ஒரு நோயல்ல என்பதனையும் நாம் புரிந்து கொண்டாக வேண்டும். இந்த புரிதலானது ஓட்டிசத்துடனான நமது நீண்ட காலப் பயணத்திற்கு மிக முக்கியமானது. இந்தப் பயணத்தில் எம் ஒவ்வொருவரினதும் பங்கு எத்தகையது? எவ்வளவு காலத்திற்கானது? என்பது பற்றியெல்லாம் நாம் தெளிவான பார்வைகளையும், வரைவிலக்கணங்களையும், புரிதல்களையும் கொண்டிருக்க வேண்டியது அவசியமானது.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் ஓட்டிசத்திற்கான அனைத்துச் சேவைகளும், ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. தற்போதைய நடைமுறைகளை அவதானிக்கும்போது, அதற்கான சாத்தியப்பாடுகளும் மிக அரிதாகவே தென்படுகின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமது பொருளாதாரத்திலும், கொள்கைகளிலும், விழுமியங்களிலும் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட இன்னமும் ஓட்டிசத்திற்கான அனைத்துச் சேவைகளையும் தேவைப்படும் காலம் வரைக்கும் வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. எனவே, வளர்முக நாடுகளில் சேவையாளர்களுக்கான பற்றாக்குறையும், சேவைகளுக்கான தேவையும் அதிகரித்து காணப்படுவது இயல்பானதே.
இந்த யாதார்த்தத்தில் நாங்கள் என்ன செய்யலாம் என்பதனையும், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் உரத்துச் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கின்றோம். முதலில் ஓட்டிசத்திற்கான சிவப்புக் சமிக்ஞைகளை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம். அவ்வாறு ஏதாவது தென்பட்டால், அது பற்றி நாம் குடும்ப சுகாதாரப் பணியாளரிடமோ, அல்லது வழக்கமாக ஆலோசனை பெறுகின்ற வைத்தியரிடமோ தெரிவித்து பொருத்தமான வழிகாட்டல்களைப் பெறுதல் நல்லது. இப்போதுள்ள நிலைமைகளின்படி, இலங்கையின் சில மாவட்டங்களில் ஓட்டிசம் தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் ஓட்டிசம் இருக்கிறதா இல்லையா என்பதனைத் தீர்மானிக்கக் கூடிய, அவ்வாறிருந்தால் அது எந்த அளவில் இருக்கின்றது? அதன் பிரதான இயல்புகளாக அல்லது கட்டுப்பாடுகளாக என்னென்ன விடயங்கள் இருக்கின்றன என்பதனை ஓரளவு துல்லியமாகக் கணிப்பிடக்கூடிய துறைசார் வல்லுனர்கள் உருவாகியிருக்கின்றார்கள். அவ்வாறானவர்களை நாடிச் சென்று செம்மையான கணிப்பீடுகளை மேற்கொண்டு, பிரச்சினையின் தன்மையையும், தாக்கத்தையும் துல்லியமாக அறிந்து கொள்வது முக்கியமானது.
அதன் பின்னர், ஓட்டிசத்திற்கான ஆரம்ப இடையீடுகளை ஓர் ஒருங்கிணைந்த முறையில் பெற்றுக்கொள்வது அவசியமானது. ஓட்டிசத்திற்கான இடையீடுகள் பலவகைப்பட்டனவாக இருப்பதனால், அவற்றை துண்டு துண்டாக பல இடங்களில் பெற்றுக்கொள்வதிலும் பார்க்க, அவற்றை ஒரேயிடத்தில் பெற்றுக்கொள்ள முடிந்தால், அதனை அவ்வாறே செய்வது பல வழிகளில் நன்மையானது. ஓட்டிசம் என்றால் என்ன என்பதனை மட்டுமல்லாது, அதன் அனைத்து விதமான இடையீடுகள் பற்றியும் பெற்றோர்கள் அறிந்து கொள்வது தேவையானது. அறிந்து கொள்வது மட்டுமல்ல, முடியுமான வேளைகளில் எல்லாம், பெற்றோர்கள் தாமும் அந்த இடையீடுகளை மேற்கொள்ளப் பழகுவதும், அதில் பரிச்சயம் பெற்றுக் கொள்வதும் அவசியமானது. அதாவது ஓட்டிசத்திற்கான இடையீடுகளில் பெற்றோர் இணைச் சிகிச்சையாளர்கள் எனும் வகிபாகத்தை ஏற்றாக வேண்டும். பெற்றோர் என்னும் பதம் தாய்மார் மற்றும் தந்தைமார் என்ற இரண்டு பொறுப்பானவர்களையும் உள்ளடக்கியிருக்கின்றது என்பது வெளிப்படையானது.
உண்மையில் இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் பல நாடுகளிலும் ஓட்டிசத்திற்கான பெருமளவு இடையீடுகளை பெற்றோரே வழங்குகின்றார்கள். அல்லது வழங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஓட்டிசம் என்பது பிள்ளையின் பிரச்சினை மாத்திரமல்ல. அது பெற்றோரின் பிரச்சினையும்கூட. ஓட்டிச நிலைமையுடைய பிள்ளைகளின் பெற்றோர் தமது வகிபாகத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும். அவர்கள் பெற்றோராக மாத்திரம் தொழிற்படாது, சிகிச்சையாளர்களாகவும், இணைச் சிகிச்சையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், பயிற்சியாளர்களாகவும், துணையாளர்களாகவும் தொழிற்பட வேண்டி வரும். இவ்வாறான பல வகிபாகங்களை எடுக்கும்போது, பெற்றோர் தமது வாழ்க்கை முறைமை, மற்றும் வாழ்க்கைக்கான இலக்குகள் போன்றவற்றையும் மீள்வடிவமைக்க வேண்டி ஏற்படும். இது இயல்பானது. தேவையானதும்கூட.
ஓட்டிசத்திற்கான ஆரம்ப இடையீடுகளைத் தொடர்ந்து, ஏற்படுகின்ற முன்னேற்றத்தைப் பொறுத்து அவர்களது முறைசார் கற்றல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவும், பாடசாலை அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். உண்மையில் உட்படுத்தல் கல்வி என்பதுதான் சிறந்தது என்ற போதும், நடைமுறையில் அனைத்துப் பிள்ளைகளும் உட்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட முடியாமல், விசேட தேவையுடையவர்கள் என்ற அடையாளத்தோடு, அதற்குரிய வகுப்பறைகளில் முடங்கிப் போவதும் நடைபெறுகின்றது. கல்விப் புலத்தில் தற்போது காணப்படும் கட்டுப்பாடுகளைக் கருத்திலெடுக்கும்போது, ஓட்டிசம் உடைய பிள்ளைகளை முற்றுமுழுதாக புறமொதுக்காமல், அவர்களுக்குரிய முறையில், அவர்களுக்கு உகந்த சூழலில், அவர்களுக்குத் தேவைப்படும் கற்றல் செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொண்டு, ஒரு சில பாட வேளைகளிலும், பாடசாலைக்குரிய பொதுவான நிகழ்வுகளிலும் அந்தப் பிள்ளைகளை ஏனைய அனைத்து மாணவர்களுடனும் இணைத்துக் கொண்டு செல்வது நன்மையானதாக இருக்கும். உட்படுத்தல் கல்வி என்பது, விசேட தேவைகளையுடைய, திறன்களையுடைய பிள்ளைகளுக்குப் பிரயோஜனமானது என்பது உண்மைதான். ஆனால், உட்படுத்தலானது சாதாரண பிள்ளைகள் விசேட தேவைகளுடையவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும், அவர்களுக்கு உதவி மற்றும் ஒத்தாசைகளை வழங்குவதற்கும், பல்வகைமை எனும் எண்ணக்கருவை தமக்குள் உருவாக்கிக் கொள்வதற்கும், இவை அனைத்திற்கும் மேலாக சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகின்றது என்றால் அது மிகையாகாது.
ஓட்டிசமுடைய பல பிள்ளைகள் தமது முறைசார் கல்வியில் இடர்பாடுகளை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இந்த யாதார்த்தத்தில், அவர்கள் முறைசார் கல்வியிலிருந்து விலகி, தமக்குத் தேவைப்படும் பிரத்தியேகமான கல்வியைப் பெறுவதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். வகுப்பறைகளில் மாத்திரமன்றி, வகுப்பறைகளுக்கு வெளியிலும் அவர்கள் தமக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொள்வதற்கு நாம் வழி சமைக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்குத் தேவைப்படும் வாழ்க்கைத்திறன்களை அடையாளங் கண்டு, அவற்றில் கூடிய அளவு சிரத்தையை எடுத்துப் பயிற்சியளிக்க வேண்டும். அவர்கள் இயலுமானளவு தனித்து வாழ்வதற்கு அல்லது மிகவும் குறைந்த ஆதரவோடும், மேற்பார்வையோடும் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கு நாம் முயல வேண்டும். முயல்வது மாத்திரமன்றி, பாடுபட வேண்டும். பாடுபட்டாகத்தானே வேண்டும்.
பொதுவாக, விசேட தேவையுடைய பிள்ளைகளையுடைய குடும்பங்கள் அந்தப் பிள்ளைகளில் பரிதாபம் கொண்டு, அல்லது தங்களில் சுயபச்சாதாபம் கொண்டு, அவ்வாறான பிள்ளைகளுக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்து, அவர்களை எந்நாளும் பிறரில் தங்கி வாழ்பவர்களாக மாற்றி விடுவார்கள். ஓட்டிசமுடைய பல பிள்ளைகளுக்கும் இந்த துர்ப்பாக்கியம் நடைபெறுவதனைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஓட்டிசமுடையவர்கள் சிறுவயதில் இருந்தே தனித்து வாழும் திறன்களைக் கற்றுத் தேர்வதனை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, அந்தப் பிள்ளைகள் தமது பெற்றோரில் ஒருவரோடு அல்லது பெற்றோர் இருவரோடு மட்டும் தமது உறவை நிறுத்தி கொள்ளப் பார்ப்பார்கள். அவ்வாறான ஒரு விடயம் நடைபெறுவதனை முடியுமானளவு தவிர்த்துக் கொள்வது நல்லது. ஓட்டிசமுடைய பிள்ளைகள் ஏனைய தமது சகோதரர்களோடும், நெருங்கிய உறவினர்களோடும் பழகுவதனை ஊக்குவித்தல் அவசியம். அதுபோல அவர்களும் ஓட்டிசமுடைய தமது சொந்தத்தைப் புரிந்து கொண்டு, அவர்களோடு உறவாட எத்தனிக்க வேண்டும். இந்த இருவழி அணுகுமுறை என்பது மிகவும் தேவையானது.
ஓட்டிசம் உடைய பல பிள்ளைகள் டிஜிற்றல் உபகரணங்களோடு நெருங்கிய உறவைப் பேணக்கூடியவர்களாக இருப்பது அவதானிக்கப்படுகின்றது. பிள்ளைகளுக்கான ஆரம்பகால இடையீடுகளில் அவர்கள் டிஜிற்றல் உபகரணங்களின் பாவனையைத் தவிர்த்துவிட வேண்டும் அல்லது குறைத்துவிட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டாலும், அவர்கள் வளர்கின்ற பொழுது டிஜிற்டல் தொழில்நுட்பத்தின் உதவி பெற்று முன்செல்வது மிகவும் பிரயோசனமான ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக சமூகத் தொடர்பாடல்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பிள்ளைகள் டிஜிற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் தமது தொடர்பாடலை வளர்த்துக் கொள்வதற்கு வழி பிறக்கின்றது. அது போல் முறைசார் கல்வியைப் பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும், அவை தொடர்பான பரீட்சைகளுக்கு முகங்கொடுப்பதற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பம் உதவி செய்கின்றது. செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சிறிய மற்றும் நடுத்தர றோபோக்கள், மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பத்தோடு கூடிய கருவித் தொகுதிகள் யாவும் ஓட்டிசம் உடைய பிள்ளைகளின் வாழ்வை இலகுவாக்குவதற்கு உதவ முடியும். எனவே, அத்திசை நோக்கியும் நாம் பயணிக்க வேண்டியிருக்கின்றது.
ஓட்டிசம் உடையவர்களின் முக்கிய இயல்புகளில் ஒன்றாக அவர்கள் விடயங்கள் யாவும் எப்போதும் ஒரே விதமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதனைக் குறிப்பிடலாம். இன்னுமொரு வகையில் கூறினால், அவர்கள் மாற்றங்களை விரும்பாதவர்களாக, அவற்றைச் சகித்துக் கொள்ள மாட்டாதவர்களாக, அல்லது மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடைவதில் இடர்பாடுகளைக் கொண்டிருப்பவர்களாகக் காணப்படுவார்கள். இந்த இயல்பில் நன்மையும் உண்டு, சவால்களும் உண்டு. சில விடயங்களை அவர்களுக்குச் சிரமப்பட்டாவது பழக்கி விட்டால், அவர்கள் அவற்றை எப்போதும் ஒரேவிதமாகச் செய்து கொள்வார்கள். தற்சுகாதாரப் பழக்கங்கள், வாழ்க்கைத்திறன் பயிற்சிகள், சிகிச்சை தொடர்பான நடைமுறைகள், நேர ஒழுங்கு பேணுதல் போன்ற விடயங்கள் ஒரே விதமாக நடைபெறுவதனை நன்மையாகக் கொள்ளலாம். மறுதலையாக, ஒரே பராமரிப்பாளருடன் ஒட்டிக் கொண்டிருப்பது, ஒரே சிகிச்சையாளர்தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பது, ஒரேவிதமான வாழ்க்கை முறைகளுக்காக அடம்பிடிப்பது, மாற்றங்களை எதிர்ப்பது, தமது வழக்கங்கள் மாறுகின்றபோது அவற்றைச் சமாளிக்க முடியாமல் மிக அதீதமான எதிர்வினைகளைக் காட்டுவது எனப் பல சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஓட்டிசமுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கைச் சூழல் மாறுகின்ற பொழுது, அல்லது அவர்களது பாடசாலை அல்லது பயிற்சியிடங்கள் மாறுகின்ற பொழுது, அல்லது அவர்களது நாளாந்த நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்ற பொழுது, தமக்கு விருப்பமான ஒரு பொருளைத் தொலைக்கின்ற பொழுது, உறவினர்கள் வருகின்ற பொழுது, வீட்டில் ஒரு நன்மை தீமை நடக்கும் பொழுது, நெருங்கிய உறவொன்றை இழக்கின்ற பொழுது என்று வாழ்க்கை ஓட்டத்தின் எதிர்பாராத திருப்பங்களிலெல்லாம் ஓட்டிசமுடைய பிள்ளைகள் சிரமங்களை எதிர்கொள்வார்கள். அந்தச் சிரமங்களின்போது அவர்கள் காட்டுகின்ற எதிர்வினைகளுக்கும், அந்தச் சிரமங்களை அவர்கள் கடந்து வருவதற்கு ஓட்டிசம் இல்லாத நாம் அனைவரும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
குறிப்பாக, இந்தப் பிள்ளைகள் பதின்ம வயதை அடைகின்ற பொழுது, ஹோமோன்களின் எழுச்சியும், துணைப்பாலியல்புகளின் விருத்தியும், பாலியல் உணர்வுகளும், பாலியல் தேவைகளும் அவர்களை வாட்டி வதைப்பதனை அவதானிக்கலாம். இந்தக் காலப்பகுதியானது அவர்களை மாத்திரம் என்றில்லாது, அவர்களது பெற்றோரையும், நெருங்கிய குடும்பத்தினரையும், சிகிச்சைகளை வழங்குபவர்களையும், கற்றல் செயல்பாட்டு வழிகாட்டிகளையும், சில வேளைகளில் அயல் சுற்றம் மற்றும் சமூகத்தில் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளைக் கொடுக்கின்ற காலப் பகுதியாக இருக்கின்றது. ஆனாலும், வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும்போல, இந்தச் சிரமங்களும் தற்காலிகமானவையே. சற்றுப் பொறுமையோடு இருந்து, விடயங்களை அவர்களது பார்வையில் புரிந்து கொண்டு, நடத்தைகளை ஆராய்ந்து, அவற்றிற்குப் காரணமாக இருப்பவற்றில் இடையீடுகளை மேற்கொண்டு, பொருத்தமான மீள்வலியுறுத்திகளை உபயோகித்து அவ்வாறான பிரச்சினை கொடுக்கும் நடத்தைகளைப் படிப்படியாகச் சமாளிக்கலாம். சரியாகக் கையாளப்பட்டால், பொதுவாகப் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் இந்தப் பிரச்சினைகள் யாவும் குறைவடைந்து, ஓட்டிசமுடையவர்களின் நடத்தைகள் ஒரு சமநிலைக்கு வந்துவிடும்.
நடுத்தர மற்றும் கடுமையான ஓட்டிச இயல்புடைய பிள்ளைகள் ஆரம்பகால தீவிர தலையீடுகள், தொடர்பயிற்சிகள், விசேட கல்விச் செயல்பாடுகள் மற்றும் ஏனைய அணுகுமுறைகள் என்பவற்றினூடாகப் பயணித்தாலும், அந்தப் பயணமானது பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் மெது மெதுவாக ஒரு மந்த கதியை அடைந்து விடக்கூடும். இது மிகவும் முக்கியமான ஒரு புள்ளியாகும். அந்தப் பயணம் மந்த கதியை அடையாது தொடர்ந்து செல்வதற்கு, சாதாரண கல்வியைத் தொடர முடியாத, நடுத்தரமான மற்றும் கடுமையான ஓட்டிசம் உடைய பிள்ளைகளை நேரகாலத்தோடு தொழில்சார் விடயங்களுக்குப் பரிச்சயமாக்கி விடுவது அவசியமானது. ஒரு விடயத்தை ஒரே மாதிரி திரும்பத் திரும்பச் செய்கின்ற அவர்களது ஓட்டிச இயல்பானது சில வகைப்பட்ட தொழில்களுக்கு மிகவும் உதவியாக அமைந்து விடும். பிள்ளையின் இயல்புக்கும், விருப்பத்திற்கும், தொழில்களின் தன்மைக்கும், வேண்டுகைக்கும் இடையே ஒரு மையப்புள்ளியைக் கண்டுபிடித்து, பொருத்தமான பயிற்சிகளை அளித்தல் வேண்டும். அபிவிருத்தியடைந்த பல நாடுகளிலும், நமக்கு அண்மையில் உள்ள நாட்டிலும் அவ்வாறு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட பல ஓட்டிசமுடையவர்கள் பல்வேறு பணிகளை நேர்த்தியாகச் செய்யக்கூடியவர்களாக, தொழில்தேர்ச்சியுடன் தொழிற்படுகின்றமையைக் காணலாம். இது மிகவும் நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றது.
ஓட்டிசம் என்பது யாருடைய குழந்தை? மேலோட்டமான சிந்தனையுடையவர்கள் அது அக்குழந்தையின் பெற்றோர்களதுதானே என்று பதிலிறுக்கலாம். ஆயினும், நுண்மமான சிந்தை உடையவர்கள் இந்தக் கேள்வியின் ஆழத்தைப் புரிந்து கொள்வார்கள். ஒரு குழந்தை ஓட்டிச இயல்புகளோடு பிறந்தால் அந்தப் குழந்தையை எவ்வாறு கையாள்வது? அந்தப் குழந்தைக்கு எவ்வாறான சேவைகள் கிடைக்கும்? இலவசக் கல்விக்கும், இலவச மருத்துவத்துவத்திற்கும் பெயர் போன இலங்கையில் ஓட்டிசமுடைய குழந்தைக்கு யார் பொறுப்பு? அதற்கான சேவைகளை வழங்குபவர்கள் யார்? முதன்மைச் சேவையாளர் யார்? இலங்கையில் ஓட்டிசமுடைய குழந்தைகளுக்கான ஏதாவது பதிவுகள் இருக்கின்றதா? ஏதாவது கொள்கை அல்லது செயல்பாட்டு நியமம் இருக்கின்றதா? இல்லையெனில் அது ஏன்? அதற்கு யார் பொறுப்பு?
எண்ண ஓட்டமொன்றில் கேள்விகள் மேற்கிளம்புவது தவிர்க்க முடியாதது. அனைத்துக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைப்பது என்பதும் சாத்தியப்படாது. ஆயினும் கேள்விகள் பிறக்க வேண்டும். கேள்விகள் தேடலை அதிகரிக்கும், தேடல்கள் விடைகளை நோக்கி நம்மை இட்டுச் செல்லும். சில வேளைகளில் அதற்குச் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய தேவை எழலாம்.
அதுவரை ஒட்டிசம் எம் அனைவரினதும் குழந்தையாக இருக்கட்டும். ஓட்டிசம் உடைய பிள்ளைக்கு நாம் அனைவரும் உதவி செய்வோம். பதின்ம வயதைஅடைந்த ஓட்டிசப் பையனையும், பெண்ணையும் நாம் கவனமாகக் கையாள்வோம், அவர்களை எவ்வகையிலாவது தொழில்சார் விடயங்களில் பரிச்சயமும் பயிற்சியும் பெறுவதனை ஊக்குவிப்போம். முடியுமான வேளைகளில் எல்லாம் ஓட்டிசம் போன்ற விசேட இயல்புடையவர்களை நமது பணிகளிலும், வாழ்விலும் இணைத்துக் கொள்வோம். முக்கியமாக அவர்களுக்குக் களங்கத்தை ஏற்படுத்தாது, அவர்களைப் பரிகசிக்காது, அவர்களைப் புறமொதுக்காது, அவர்களையும் எம்மைப்போல கௌரவமான சகமனிதர்களாக வாழ வழி சமைப்போம்.
பேராசிரியர் சாம்பசிவமூர்த்தி சிவயோகன் உளமருத்துவ நிபுணர்
