கடந்த தசாப்தத்தின் ஆரம்ப வருடங்களில் ஒட்டிசம் சம்பந்தமான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியிலும், சுகாதாரப் பணியாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வந்தது. அதன் காரணமாக, ஒட்டிச அறிகுறிகளோடு அடையாளங்காணப்பட்ட பல பிள்ளைகள் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆயினும், அக் காலப்பகுதியில் அவ்வாறு இனங்காணப்படும் பிள்ளைகளுக்குத் தேவைப்பட்ட கணிப்பீடுகள், சேவைகள், இடையீடுகள் மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதில் பெற்றோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள். இந்தப்பிள்ளைகளுக்கான சிகிச்சை மற்றும் இடையீடுகளை வழங்கும் விசேட சேவை நிலையம் ஒன்றின் உருவாக்கம் தொடர்பான தேவை அநேகமான பெற்றோர்களாலும், துறைசார் விற்பன்னர்களாலும் உணரப்பட்டது.
இந்த பின்னணியில் உளமருத்துவ நிபுணர் பேராசிரியர் சா. சிவயோகன், குழந்தை மருத்துவ நிபுணர் பேராசிரியர் ச. கீதாஞ்சலி, பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் தி. குமணன் ஆகிய மூவரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மாதவம் எனும் பெயரில் ஒட்டிச நிலைமையுடைய பிள்ளைகளுக்குச் சிகிச்சை வழங்கும் ஒரு நிலையத்தை 2014ஆம் ஆண்டு ஆரம்பித்தனர். சுகாதாரத் திணைக்களம், யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம், உளைநல சங்கம் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. ஒட்டிசத்திற்கு உவப்பான ஒரு சூழலின் தேவை கருதி இந்த நிலையம் வைத்தியசாலைக்கு வெளியே வாடகைக்குப் பெறப்பட்ட வீடு ஒன்றில் இயங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கச்சேரி நல்லூர் வீதியில் இயங்க ஆரம்பித்த மாதவம், பின்னர் சிவராஜா அவென்யூ, திருநெல்வேலி எனும் முகவரிக்கு இடம்மாறியது.
கடந்த பதினொரு வருடங்களில் மாதவம் வடமாகாணத்திலும், அதற்கு அப்பாலும் இருக்கின்ற பல நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்குத் தனது சேவைகளை வழங்கியிருக்கின்றது. ஆயினும், இந்த நிலையத்தில் சேவைகளைப் பெறவிரும்புகின்ற பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவிற்கு மனித வளங்கள் போதியளவு இல்லாமையினால், மாதவத்தில் எப்போதும் ஒரு காத்திருப்புப் பட்டியல் இருந்து வந்திருக்கின்றது. இந்த யதார்த்தத்தில், வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களிலும் மாதவம் போன்ற நிலையங்கள் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். அதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது மாதவத்திற்குத் தேவைப்படும் மனித வளங்களில் ஒரு மிகச்சிறிய பகுதியையே சுகாதாரத் திணைக்களத்தினால் வழங்கக்கூடியதாக இருக்கின்றது. மாதவத்தில் சேவைகளை வழங்கும் ஏனைய பணியாளர்கள் ஒன்றில் தொண்டு நிறுவனங்களாலும், நலன் விரும்பிகளாலும் ஆதரிக்கப்படுகிறார்கள், அல்லது அவர்கள் தன்னார்வ அடிப்படையில் தமது பணிகளை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையத்திற்குத் தேவைப்படும் முழுமையான பல்துறைசார் ஆளுணிக்கான பணிநிலை ஆவணம் தயாரிக்கப்பட்டு, அது இப்போது சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் நிறுவனங்களின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றது. அந்த அனுமதி கிடைத்ததும், சுகாதாரத் திணைக்களத்தினர் அந்தப் பதவி நிலைகளுக்கான பணிநிலை வெற்றிடங்களை விளம்பரப்படுத்திப் பொருத்தமான ஆளுணியை நியமிக்கக்கூடியதாக இருக்கும். அவ்வாறு நடைபெறும்போதே, இந்த நிலையமானது முழுமையாக சுகாதாரத் திணைக்களத்தின் ஆதரவோடு இயங்கும். அவ்வேளை, பிள்ளைகளுக்குத் தேவைப்படும் பரந்துபட்ட சேவைகளை அதிக காத்திருப்புக்காலமின்றி வழங்கக்கூடியதாக இருக்கும்.
சுகாதாரத் திணைக்களமானது இந்த நிலையத்தின் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கோடு மாதவத்தில் சிகிச்சை பெறும் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் பல தடவைகள் கலந்துரையாடல்களை நடத்தி, அவர்களின் பின்னூட்டல்களைப் பெற்றுக்கொண்டது. பெற்றோரின் கருத்துக்களடிப்படையிலும், எமது சொந்த அவதானிப்புகளடிப்படையிலும் நோக்கும்போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிந்தது. ஒட்டிச நிலையுடைய பிள்ளைகள் எவ்வளவு நேரகாலத்தோடு இனங்காணப்படுகின்றார்களோ, அந்த அளவிற்கு அது அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றது. இதனடிப்படையில், ஒட்டிச இயல்புகளை ஆரம்ப நிலையிலேயே இனங்காண்பதற்கும், பொருத்தமான வழிகாட்டல்களை வழங்குவதற்கும் தேவைப்படும் அறிவு மற்றும் திறன்களை வளர்த்தெடுக்கும் நோக்கோடு யாழ். மாவட்டத்தில் உள்ள வைத்திய அதிகாரிகள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் ஆகியோருக்குத் தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டன
எமது பிரதேசத்தில், ஒட்டிசம் உடைய பிள்ளைகளுக்கான முறைசார் கல்வி என்பது எண்ணிறந்த பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்த துரதிர்ஷ்டமான நிலைமைக்கு பல்கsystem காரணங்கள் இருக்கலாம். விசேடகல்வி ஆசிரியர்களுக்கு ஒட்டிசம் பற்றியும், அந்த நிலைமையோடு இணைந்த சவால்களை ஏற்படுத்தும் நடத்தைகள் பற்றியும் அறிவூட்டி வலுவூட்டும் ஒரு பயிற்சியை மாதவம் பொறுப்பேற்றது. அந்தப் பயிற்சிக் காலத்தில் ஆசிரியர்கள் மாதவத்திற்கு ஒரு வார காலம் வருகை தந்து, அங்கு பிள்ளைகளைத் திறனாற்றலுடன் கையாளத் தேவைப்படும் பல்வேறுபட்ட செய்முறை அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. எதிர்காலத்தில், ஒட்டிச நிலைமையுடைய பிள்ளைகளுக்குச் சமூகத் திறன்கள் மற்றும் தொழிற்பயிற்சிகள் ஆகியவற்றை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கடந்த பதினொரு வருடங்களில் மாதவம் நிலையத்திற்கான ஒரு நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டிய தேவையை நாம் உணர்ந்து கொண்டே இருந்தோம். அதற்காகக் கைதடியில் இருந்த அரச காணி ஒன்று அடையாளங்காணப்பட்டது. அது தற்போது ஒட்டிசம் மற்றும் ஏனைய நரம்பு விருத்திக் கோளாறுகளுக்கான நிலையம் ஒன்றை அமைப்பதற்கெனச் சுகாதாரத் திணைக்களத்திற்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. மாதவத்தின் நிரந்தரக் கட்டிடத்திற்கான வரைபடம் அண்மைக்காலத்தில் ஒரு சிரேஷ்ட கட்டிடக்கலை நிபுணரினால் தன்னார்வ அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வந்தது. அது இப்போது நிறைவடைந்துள்ளது. அந்தக்கட்டிடத்திற்கான அனுமதிகளும், பொருத்தமான நிதிமூலமும் கிடைத்த பின்பு, நாம் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும்.
ஒட்டிசம் மற்றும் ஏனைய நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய பிள்ளைகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகளை ஒழுங்கான முறையில் வழங்குதல் என்பது சுகாதாரத் திணைக்களத்தினதும், அதனுடன் இணைந்த வலையமைப்பினதும் பொறுப்பாகவே கருதப்படும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எதிர்காலத்தில் சுகாதாரத் திணைக்களத்தினால் தேவையான வளங்களை ஓரளவுக்குத் திரட்டிக்கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படலாம். ஆயினும், இந்த நிலையத்திற்குத் தொடர்ந்தும அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மேலதிக உதவிகளும், ஆதரவுகளும் தேவைப்படும். ஒட்டுமொத்தத்தில், ஒட்டிச நிலைமையுடைய பிள்ளைகளின் நன்னிலைக்குப் பரந்தபட்டளவில் சமுதாயம் மற்றும் சமூகக் கட்டமைப்புகள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது.
ஒட்டிசத்திற்கான ஒரு மாகாணக் கொள்கை 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அது தனக்கான ஒரு சட்ட அந்தஸ்தை மாகாணச் சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு, எதிர்காலத்தில் ஒட்டிசமுடைய பிள்ளைகளுக்குத் தேவைப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளை ஒழுங்குமுறையோடு வழங்கக்கூடியதாக இருக்கும்.
நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப்பிள்ளைகளின் எதிர்காலத்தில் ஒளியேற்றுவோம்.
Dr. M. கேதீஸ்வரன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம்