ஒட்டிசம் என்பது கடந்த சில தசாப்த காலங்களாக உலகளாவிய ரீதியில் வளர்ந்து வருகின்ற ஒரு பாரிய சவாலாக மேலெழுந்துள்ளது. ஆரம்பகாலத்தில், ஒட்டிசமானது 0.62 வீதமாக, அல்லது 10,000 பேரில் 62 பேருக்கு இருப்பதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைக்கால அறிக்கைகள் அது ஒரு வீதமாக, அண்ணளவாக நூறு பேரில் ஒருவர் என்ற அளவில் உயர்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமானது, இன்னும் ஒருபடி மேலே சென்று, அது நூறில் இரண்டு எனும் விகிததைத் தாண்டி அதிகரித்திருக்கின்றது எனக் குறிப்பிடுகின்றது. ஒட்டிசத்தின் இந்த அதிகரித்து வரும் போக்கு, உயர்ந்த வருமானம் கொண்ட நாடுகளில் மட்டுமல்லாது, தென்னாசியாவில் உள்ள நாடுகள் உட்பட, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் தெளிவாக அவதானிக்கப்படுகின்றது. இலங்கையில், 2009ம் ஆண்டில் 18 மாதங்கள் தொடக்கம் 24 மாதங்கள் வரையான வயதையுடைய குழந்தைகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒட்டிசமானது தொண்ணூற்று மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு என்ற விகிதத்தில், அண்ணளவாக 1.07 எனும் வீதத்தில் இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் ஒட்டிசம் பற்றி இற்றைப்படுத்தப்பட்ட, தெளிவான, முழுமையான தகவல்கள் குறைவாக இருக்கின்ற போதிலும், அது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு வருகின்றது என்றே பல வைத்திய நிபுணர்கள் கருதுகின்றனர்.
இலங்கையின் வடபகுதியானது, ஒட்டிசம் இருக்கின்றது என இனங்காணப்பட்ட குழந்தைகளுக்குத் தேவைப்படுகின்ற சேவைகளைப் பெற்றுக்கொள்வதில், பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இப்பகுதியின் சுகாதார உட்கட்டமைப்பானது, மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற கொடூரமான ஆயுத முரண்பாடுகளாலும், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களாலும், தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலான நெருக்கடிகள் சுகாதாரத்துறைசார் ஆளணியினரில், குறிப்பாக, குழந்தைகளுக்கான உளமருத்துவ நிபுணர்கள், குழந்தைகளுக்கான பொது மருத்துவ நிபுணர்கள், குழந்தைகளின் விருத்தியோடு தொடர்புடைய மருத்துவ நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள், இணைந்த சுகாதாரத்துறையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகிய அனைத்து வகைப்பட்ட ஆளணியினரிலும் பெருமளவு பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பகுதியில் ஒரு சில பொது உளமருத்துவ நிபுணர்களும், குழந்தைகளுக்கான பொது மருத்துவர்களும் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மறுபுறத்தில், கல்வித் திணைக்களத்தின் விசேட கல்வி அலகும, சில தனியார் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளும் ஒட்டிச நிலையை உடைய பிள்ளைகள், மற்றும் கற்றலில் இடர்பாடுகளைக் கொண்டிருக்கும் பிள்ளைகள் போன்றவர்களுக்கான ஆதரவுகளை வழங்கினாலும், அந்தச் செயல்பாடுகள் வலுவானதாக, அல்லது விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களை அடியோற்றி நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பல பிள்ளைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பாடசாலைக் கல்வியிலிருந்தும், உட்படுத்தல் கல்வியிலிருந்தும் விலக்கி வைக்கப்படுகின்றனர். மேலும், அவர்களின் குடும்பங்கள் தமக்குத் தேவைப்படுகின்ற தொடர்ச்சியான, சிறப்பான ஆதரவுகள் எவையுமின்றித் தம் வாழ்வைச் சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தோடு, கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
மாதவத்தின் பயணமானது, மருத்துவ கலாநிதிகளான சிவயோகன், கீதாஞ்சலி சத்தியதாஸ் மற்றும் குமணன் ஆகிய மூன்று மருத்துவ நிபுணர்களின் இதயபூர்வமான தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கியது. அவர்களின் நீண்டகாலக் கனவுகளில் ஒன்று 2014ம் ஆண்டு ‘மாதவம்’ எனும் நிலையத்தின் தோற்றத்துடன் நனவாகியது. இரண்டாயிரத்துப் பதினான்காம் ஆண்டு, உலக ஒட்டிச விழிப்புணர்வு நாளான ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதியன்று, மாதவம் யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்திருந்த ஓர் அமைதியான இடத்தில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவிருந்த திரு. பி. இரவீந்திரன் அவர்களினாலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராக இருந்த மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அவர்களினாலும் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வு ஒட்டிச நிலைமையுடன் இனங்காணப்படும் குழந்தைகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் வடமாகாணத்தின் சுகாதாரத்துறையினர் கொண்டிருந்த வலுவான அர்ப்பணிப்பைச் சான்று பகர்ந்தது.
மாதவம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைப்பதற்கு முன்னர் சில விடயங்கள் நடந்தேறின. இரண்டாயிரத்துப்ப பதினான்காம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இரண்டு இளம் பெண்கள் மாதவம் நிலையத்தில் பணிபுரிவதற்காக எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் பின்னர் இந்தியாவின் வேலூரில் உள்ள புகழ்பெற்ற, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் சிறுவர் மற்றும் கட்டிளமைப் பருவத்தினருக்கான உளநலப்பிரிவில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டனர். குறிப்பாக, ஒட்டிசமுடைய பிள்ளைகளுக்குத் தேவையான கணிப்பீடுகளை மேற்கொள்ளல், பெற்றோரை மையப்படுத்திய ஆரம்ப இடையீடுகளை வழிப்படுத்துதல் ஆகிய விடங்களில் அவர்கள் பயிற்சி பெற்றார்கள். ஆயினும், அவர்களில் ஒருவரால் தனது பயிற்சியைத் தொடர முடியாமல் போனது. மற்றையவர் மாத்திரம் ஒட்டிச இடையீடுகளில் ஆரம்பப் பயிற்சி பெற்ற ஒருவராக மாதவத்தில் இணைந்து கொண்டார். இத்தகைய பின்னணியில், மாதவத்தின் முதல் ஓரிரு ஆண்டுகள் கடும் சவால்களால் நிறைந்திருந்தன. குறிப்பாக, ஆரம்பகாலத்தில் இந்த நிலையம் துறைசார் விற்பன்னர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் ஆகியோரின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டது. பல மாதங்களாக ஒரு வேலூரில் பயிற்சிபெற்று வந்த அந்த ஒருவர் மட்டுமே நிலையத்தின் மேலாளராகவும், சிகிச்சையாளராகவும் கடமையாற்றிக் கொண்டு தனது சேவைகளை வழங்கினார். அவரோடு, ஒரு பகுதி நேரச் சிகிச்சை உதவியாளரும், ஒரு அலுவலக உதவியாளரும் பணியில் இருந்தனர். அதன் பின்னர், மாதவத்தில், சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் முதலில் பகுதி நேரமாகவும், காலகிரமத்தில் முழு நேரமாகவும் இணைந்து கொண்டனர். இவர்களோடு, ஓர் உளமருத்துவ நிபுணர், மற்றும் ஒரு குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணர் ஆகியோரினால் மருத்துவப் பரிசீலனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குறுகிய காலத்தில், மாதவம் ஒட்டிசம் இருப்பதாக இனங்காணப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான முக்கியமானதோர் ஆதரவு நிலையமாக வளர்ச்சியடைந்தது. அத்துடன் அது பொதுமக்கள் மற்றும் அரச துறைகள் ஆகிய இரண்டு தரப்பிலிருந்தும் அங்கீகாரத்தையும், அனுசரணையையும் பெற்றுக் கொண்டது. மாதவம் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வடமாகாணத்தின் சுகாதாரத்துறையோடு உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டது. மாதவத்திற்கான அங்கீகாரம், அரச ஆதரவு, மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஒரு மைல்கல்லாக அது அமைந்திருந்தது.
மாதவம் இயங்கு நிலைக்கு வந்த காலம் தொடக்கம், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மருத்துவர்கள், மருத்துவர் காவேரி மற்றும் மருத்துவர் சுமி ஆகியோர், தங்கள் தாய்நாட்டிற்கு வருகை தந்து, மாதவத்தோடு இணைந்து அதன் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தொழில்ரீதியான அனுபவங்களையும், தனிப்பட்ட வாழ்வனுபவங்களையும், தங்கள் சமூகத்துடன் தாங்கள் கொண்டிருந்த ஆழமான தொடர்புகளையும் பயன்படுத்தி, ஒட்டிச நிலையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்குத் தேவைப்படும் வழிகாட்டல்களையும், தொடர்ச்சியான ஆதரவுகளையும் வழங்கினார்கள்.
இவ்வாறான பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற போதிலும், மாதவம் தனது செயல்பாடுகளில் படிப்படியான பின்னடைவுகளைச் சந்தித்தது. குறிப்பாக, 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் மாதவத்தின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிநிலை ஏற்பட்டது. மாதவத்தின் இடையீடுகள் யாவும் பெருமளவில் Childhood Autism Rating Scale எனும் ஒரு அளவீட்டை மாத்திரம் கருத்தில் கொண்டு இருந்தமை, பிள்ளைகளுக்கான இடையீடுகள் யாவும் முழுக்க முழுக்கப் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெற்றோர்களின் பூர்த்தியடையாத எதிர்பார்ப்புகளால் ஏற்பட்ட அதிருப்தி நிலை, பணியாளர்களின் உற்சாகக் குறைவு, சிகிச்சையளிப்பவர்களின் அனுபவக்குறைபாடு, போதியளவு மேற்பார்வையின்மை போன்ற பல காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
அதற்குப் பிற்பாடு, இந்த நிலையமானது 2017ம் ஆண்டு செப்ரம்பரில் புத்துயிர் பெற்றது. மாற்றத்திற்கான தேவையை உணர்ந்த மாதவம் ஆலோசனைக் குழுவினர் உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்தார்கள். அவர்கள் பயிற்சி பெற்ற, பல்துறைசார் விற்பன்னர்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள். ஒழுங்கான ஆவணப்பராமரிப்பு நடைமுறைகளைச் செயற்படுத்தினார்கள். தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி, அவற்றினூடாக அவ்வப்போது உருவாகின்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவினார்கள். மாதவம் அனைவராலும் இலகுவாக அடையக்கூடிய வகையில் பலாலி வீதியில் உள்ள சிவராஜா அவெனியூவிற்கு இடம் மாறியது. அங்கு சற்று விரிவான இடவசதிகள் ஏற்படுத்தப்பட்டன. குறுகிய காலத்திற்குள் மாதவத்தின் பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர் ஆகியோருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காகச் சர்வதேச நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அத்துடன் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாக, Applied Behaviour Analysis எனும் பிரபலமான பிரயோக நடத்தை ஆய்வுச் சிகிச்சைமுறை மாதவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாதவத்தில் வழங்கப்படும் இடையீடுகள் யாவும் பெற்றோருடன் சிகிச்சையாளர்களும் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுபவையாக, விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை அடியோற்றியதாக மேற்கொள்ளப்பட்டன.
அதே ஆண்டில், வடமாகாணத்திற்கான ஒட்டிசம் கொள்கையின் அறிமுகமும், ஒட்டிசம் பற்றிய சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன. அவற்றிற்கூடாக, சமூகத்தில் ஒட்டிசம் தொடர்பாக ஏற்பட்டுக்கொண்டிருந்த சவால்கள் அடையாளப்படுத்தப்பட்டன. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மாதவத்தின் சேவைகள் மேலும் விரிவடைந்தன. இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு மாதவத்திற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் மாதவத்தினால் வழங்கப்படும் விசேட சிகிச்சை நடைமுறைகள் சர்வதேசப் பயிற்சிகள் மூலமும், நிபுணர்களின் ஒழுங்கான வழிகாட்டல்கள் மூலமும் வலுப்பெற்றன.
‘மாதவம்’ என்பது ‘மாபெரும் தவம்’ என்று தமிழில் பொருள்படும். இந்த நிலையமானது வளப்பற்றாக்குறையான ஒரு சூழலில் ஒட்டிசம் பராமரிப்பிற்குத் தேவைப்படும் சிறப்பான சேவைகளின் அவசியத்தைப் பூர்த்திசெய்யும் நோக்குடன் உயர் வருமான நாடுகளில் காணப்படும் அரச தனியார் கூட்டாண்மை மாதிரியைத் தவிர்த்து, ஓர் அரச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டாண்மை மாதிரியை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மாதவம், யாழ்ப்பாண பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், உளமருத்துவ சங்கம், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Interational Medical Health Organisation மற்றும் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் Manitha Neyam Trust ஆகியவற்றை ஒருங்கிணைத்தது. இந்தச் சர்வதேச ஒத்துழைப்பானது நாட்டில் நிச்சயமற்றதாகக் காணப்படும் பொருளாதார நிலைமைகளின்போதும், எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்கின்றபோதும் நிலையத்திற்குத் தேவைப்படுகின்ற நிதி ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதிலும், புலம்பெயர்ந்தோர் வளங்களைப் பொருத்தமான வழிகளில் பயன்படுத்துவதிலும் பெரும் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மாதவம் நிலையமானது வெறுமனே சேவைகளை வழங்குவதோடு மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாது, தனது சேவைகளை விரிவுபடுத்தவும், சமூகத்துடனான ஊடாட்டத்தை அதிகரிக்கவும் உதவுகின்ற பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது, வருகின்றது. உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர் போன்ற அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒட்டிசம் தொடர்பான, மாதவம் தொடர்பான பல பதாகைகள் பிரபலமான ஹோட்டல்களிலும், இரயில் நிலையம் போன்ற கூட்டமிகு இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மற்றும் வடமாகாணப் பிரதம செயலாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட பலூன் பறக்கவிடும் நிகழ்வானது, மாற்றத்திற்கான நம்பிக்கையையும், மாற்றத்தின் எதிர்பார்ப்பையும் காண்பிப்பதாக அமைந்தது. இந்த முயற்சிகள் யாவும், மாதவம் நிலையம் பற்றி ஏனையோர் அறிந்து கொள்வதற்கு உதவியதுடன், சமூக ஒற்றுமைக்கான உணர்வையும், ஒட்டிசத்திற்குரிய விசேட சேவைகளின் தேவைகளுக்கான ஆதரவையும் அதிகரித்தன.
மாதவமானது, 2014ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் 2025ம் ஆண்டு பங்குனி மாதம் வரையிலான காலப்பகுதியில், 800க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்குச் சிகிச்சைகளையும், இடையீடுகளையும் வழங்கியுள்ளது. அவர்களில் 500ற்கும் மேற்பட்ட பிள்ளைகள் ஒட்டிசம் உடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். இன்று, மாதவமானது உளமருத்துவம் மற்றும் நடத்தைச் சிகிச்சை ஆகியவற்றில் பயிற்சிபெற்ற ஒரு மருத்துவர், பல்துறைசார் விற்பன்னர்கள் நால்வர், மற்றும் சிகிச்சை உதவியாளர்கள் நால்வர் ஆகியோர் இணைந்த ஒரு மையப் பணிக்குழுவோடு இயங்குகின்றது. அத்துடன் பகுதி நேர, சமூகப் பணி, மற்றும் தன்னார்வ அடிப்படையில் மேலும் பல பெற்றோர்களும், துறைசார் நிபுணர்களும், தன்னார்வலர்களும் அங்கு சிகிச்சையாளர்களாகவும், இணைச் சிகிச்சையாளர்களாகவும், உதவியாளர்களாகவும் செயற்பட்டு, மாதவத்தின் பணி முன்னேற்றத்தில் பங்களித்துக் கொண்டிருக்கின்றனர். மாதவத்தின் சேவை வழங்கும் பணிக்குழுவினருக்கான தொடர்ச்சியான துறைசார் பயிற்சிகளும், மேற்பார்வை அமர்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தோடும், பெற்றோருக்கான தொடர் அறிவூட்டல் நிகழ்வுகளும், செய்முறைப் பயிற்சிகளும் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மாதவமானது சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்குதல் என்பதற்கு அப்பால் வேறுபல தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒட்டிசம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததைத் தொடர்ந்து, மாதவம் மாகாண அளவிலான கொள்கை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. வடமாகாண முதல்வரினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒட்டிசத்திற்கான இந்தக் கொள்கையானது, அம்மாகாணத்தின் சுகாதாரம், கல்வி, மற்றும் சமூகசேவைத் துறைகள் என்பவற்றிற்கிடையேயான கூட்டு முயற்சியின் விளைவான ஒரு சாதனையாகக் கொள்ளலாம். மேலும், இந்தக் கொள்கையானது தேசிய அளவிலான கொள்கை உருவாக்கத்திற்குரிய ஓர் அடித்தள ஆவணமாகவும் செயற்படலாம். இவற்றோடு, மாதவம் நிலையமானது இன்று ஒழுங்கான துறைசார் பயிற்சிகளை வழங்குகின்ற, மற்றும் ஒட்டிசம் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கின்ற ஒரு வளநிலையமாகவும் மாறியுள்ளது.
மாதவத்தின் இந்த மாற்றத்திற்கான பயணமானது, வளப்பற்றாக்குறையான நிலைமைகளிலும், அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு, மற்றும் சமூகம் சார்ந்த அணுகுமுறைகளுக்குாடாக ஒட்டிசம் போன்ற நிலைமைகளுக்குச் சிறப்பான சேவைகளை வழங்க முடியும் என்பதற்கான, எவ்வாறான சவால்கள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு மீள முடியும் என்பதற்கான ஒரு சான்றாகத் திகழ்கின்றது. மேலும், மாதவத்தின் பயணம் ஒட்டிசத்திற்கான உட்படுத்தல் மற்றும் அதற்கு ஆதரவான ஓர் எதிர்காலம் ஆகியவற்றிற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.
Dr. விதுனி பத்நாயக உளமருத்துவத் துறை,மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
