ஒட்டிச நிலையுடைய பிள்ளைகளின் நிலைமையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் ஒருவருக்கொருவர் வெகுவாக மாறுபடுகின்றன. எனவே, மாதவத்தில் ஒவ்வொரு குழந்தையின் தேவைக்கும் ஏற்றவாறு பிரத்தியேகமான சிகிச்சைத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. மாதவத்தில் பின்பற்றப்படும் சிகிச்சைசார் இடையீடுகளில் நடத்தைச் சிகிச்சை (behaviour therapy), விளையாட்டு அடிப்படையிலான சிகிச்சை (play-based therapy), பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை (speech and language therapy), செயன்முறைச் சிகிச்சை (occupational therapy), இயன்மருத்துவச் சிகிச்சை (physical therapy), இசைச் சிகிச்சை (music therapy), மற்றும் புலனுணர்வுசார் ஒருங்கிணைப்பு சிகிச்சை (sensory integration therapy) என்பன அடங்குகின்றன
ஒரு பிள்ளை மாதவத்திற்கு வரும் போது, முதற்கட்டமாக அந்தப் பிள்ளை தொடர்பாகப் பல்பரிமாண அடிப்படையில் விரிவான கணிப்பீடுகள் செய்யப்படுகின்றன. Childhood Autism Rating Scale (CARS) எனும் கணிப்பீட்டு அளவீடு பிரயோகிக்கப்பட்டு, அதன் பெறுபேறுகள் ஊடாக, பிள்ளையில் காணப்படும் ஒட்டிச நிலைமையின் தீவிரத்தன்மை கணிப்பிடப்படுகின்றது. அத்தோடு, பலதரப்பட்ட துறைசார் நிபுணர்களால் அந்தப் பிள்ளை வெவ்வேறு அம்சங்களில் மேலதிகமாக மதிப்பீடு செய்யப்படுகின்றது. இந்த முழுமையான, நிறைவான கணிப்பீடுகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் பிள்ளையின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை இலக்குகள் அடையாளங் காணப்படுகின்றன. பெற்றோர் இந்தச் செயல்முறைகள் முழுவதிலும், அவற்றின் ஒவ்வொரு படிநிலையிலும் பங்கேற்பதன் வாயிலாக, அவர்கள் அனைத்து வகையான கணிப்பீடுகளிலும், சிகிச்சைகளிலும் தமது பிள்ளையோடு பயணிக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. அது அவர்களது பிள்ளையினது முழுமையான வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்து விடுகின்றது.
நடத்தைச் சிகிச்சை
மாதவத்தில் ஒவ்வொரு பிள்ளையினதும் தனிப்பட்ட நடத்தை மற்றும் வளர்ச்சி தொடர்பில், அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்ற விதத்தில் விரிவான நடத்தை மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றினை அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளுக்கான தனிப்பட்ட, பிரத்தியேகமான இலக்குகள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கான தனிப்பட்ட நடத்தைச் சிகிச்சைத் திட்டம் தயாரிக்கப்படுகின்றது.
மாதவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நடத்தைசார் சிகிச்சை முறைகளாக ஆரம்பகால தீவிர நடத்தை இடையீடுகளும் (Early Intensive Behavioural Intervention – EIBI), பிரயோக நடத்தை ஆய்வுச் சிகிச்சைகளும் (Applied Behaviour Analysis – ABA) காணப்படுகின்றன.
ABA என்பது ஒட்டிச நிலையுடைய பிள்ளைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதிலும் பயன்படுத்தப்படும் ஒரு திறனாற்றல் மிக்க சிகிச்சை முறையாகும். இதில் பிள்ளையின் நடத்தையானது Antecedent-Behaviour-Consequence – ABC அட்டவணையின் மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. ABA இன் முக்கிய இலக்குகளில் ஒன்றாக, பிள்ளையைச் சரியான முறையில் அமர வைத்து கற்றலை ஆரம்பிக்க உதவுதல் என்பது இருக்கின்றது.
Discrete Trial Intervention – DTI போன்ற உத்திகளின் மூலம் பிள்ளைகளுக்கான விசேட திறன்கள் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அந்தச் சிறிய பகுதிகளுக்குத் தேவைப்படும் திறன்கள் ஒவ்வொன்றாகக் கற்றுத்தரப்படுகின்றன. இந்த நடைமுறையின்போது மீள்வலியுறுத்திகள் (Reinforcements) பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பிள்ளைகளில் அனுகூலமான நடத்தை மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் நினைவூட்டல்கள் (prompting) மற்றும் மறைந்துபோதல் (fading) போன்ற உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன. Natural Environment Teaching – NET முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிள்ளைகள் இயற்கையான சூழ்நிலையில் தமது கற்றலை அர்த்தபுஷ்டியோடும், பொதுமைப்படுத்தப்படக் கூடியதாகவும் மேற்கொள்கின்றார்கள்.
ABA இன் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பின் மூலம் பிள்ளைகள் சொற்கள் அல்லது சைகைகள் வழியான தொடர்பாடல் மூலம் தங்களது தேவைகளை வெளிப்படுத்தும் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். சமூகத் திறன்களான கண் தொடர்பு, தனது முறைக்காகக் காத்திருந்து அதனைப் பெற்றுக்கொள்ளல், மற்றும் ஏனைய பிள்ளைகளுடன் குழுவாக விளையாடுதல் போன்ற திறன்களும் ABA இனால் மேம்படுகின்றன. மேலும், சமூகக் கதைகள் என்று அழைக்கப்படும் சிறிய, தனிப்பட்ட கதைகள் வழியாகப் பிள்ளைகளுக்குச் சமூகப் பழக்கவழக்கங்கள் கற்றுத்தரப்படுகின்றன. இந்த கதைகள் ஊடாகப் பிள்ளைகள் ஏனையோரின் எதிர்பார்ப்புகள் மற்றும் தங்களது வழக்கமான செயற்பாடுகள் ஆகியவற்றை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன், இலகுவான முறையில், படங்களைக் காட்டி, அவற்றின் உதவியோடு கதை கூறும் முறையானது, பிள்ளைகளின் பதற்றத்தையும், பதகளிப்பையும் குறைத்து விடுகின்றது.
இவற்றோடு, ABA வழியாகப் பிள்ளையினது சுய பராமரிப்புத் திறன்களான பல் தேய்த்தல், கழிவறைப் பயன்பாடு, ஆடை அணிதல் போன்ற திறன்கள் கற்றுக்கொள்ளப்படுவதனால், பிள்ளைகள் தமது வேலைகளைச் சுயமாகச் செய்யப் பழகிக்கொள்கிறார்கள். அத்தோடு இந்தச் சிகிச்சை முறையானது பிள்ளைகளின் சீர்குலைக்கும் நடத்தைகளான ஆக்ரோஷமாக நடந்து கொள்ளுதல், தமக்குத் தாமே காயங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றைக் குறைப்பதற்கும் உதவி செய்கின்றது.
EIBI யானது ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ABA அடிப்படையிலான ஓர் ஆரம்ப கட்டத் தீவிர சிகிச்சை முறையாகும். இம்முறையில் பிள்ளைக்கு ஒரு வாரத்தில் 20 தொடக்கம் 40 மணித்தியாலங்கள்வரை ஒரு பயிற்றுவிக்கப்பட்ட சிகிச்சையாளரால் தீவிர இடையீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த EIBI சிகிச்சை முறையால் பிள்ளையின் அறிவாற்றல், மொழித்திறன் மற்றும் நாளாந்த வாழ்விற்கான திறன்கள் போன்றவை விருத்தியடைகின்றன.
விளையாட்டு அடிப்படையிலான சிகிச்சை
இந்தச் சிகிச்சை முறையானது ஒரு பாதுகாப்பான ஆதரவான சூழலில் இடம்பெறும் விளையாட்டுகளின் மூலம் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், அனுபவங்களைச் சீராக்கவும், உளரீதியான சவால்களைக் கையாளவும் உதவுகின்றது. இயற்கையாகவே குழந்தைகள் விளையாட்டின் மூலம் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்னும் அவதானிப்பின் அடிப்படையில் இந்தச் சிகிச்சை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாதவத்தில் பிள்ளைகள் தாம் விரும்பும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தம்மை இயல்பாக வெளிப்படுத்துகின்றார்கள். விளையாட்டுகள் அவர்களது நடத்தை மற்றும் உணர்ச்சிகளைச் சீரமைப்பது மாத்திரமின்றி, அவர்களது அறிவாற்றல், இயக்கவியல் மற்றும் உணர்வு சார் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன. கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத விளையாட்டுகளின் வாயிலாகப் பிள்ளைகள் தங்களது பிரச்சினை தீர்க்கும் திறனை விருத்தி செய்வதோடு, தொடர்பாடலிலும் முன்னேற்றம் காண்கின்றார்கள்.
விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைகளில் பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. பெற்றோர்களையும் இந்தச் சிகிச்சையில் உள்வாங்குவதன் மூலம், அவர்கள் தங்களது வீட்டுச் சூழலிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்றும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. பிள்ளைகள் மாதவத்தில் கற்ற விடயங்களை வீட்டுச் சூழலிலும் தொடர்ந்து பயன்படுத்துவதனால், எதிர்பார்க்கப்படும் இலக்குகளை இலகுவாக அடைய முடிகின்றது.
பாகமேற்று நடித்தல், மற்றும் பாவனை செய்து விளையாடுதல் போன்ற செயற்பாடுகள் ஊடாகப் பிள்ளைகள் சமூகத் தொடர்புகளை ஆராய்ந்து பொருத்தமாக எதிர்வினையாற்றுவதற்குக் கற்றுச் கொள்கின்றார்கள். இது அவர்களது சமூகத் தொடர்பு சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்குச் சாதகமானதொரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை
ஒட்டிச நிலையை உடைய பிள்ளைகளின் தொடர்பாடல் திறன் மேம்படுவதில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முக்கிய பங்காற்றுகின்றது. பேச்சு, மொழி, சமூகத் திறன், மற்றும் அறிவாற்றல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட சிகிச்சைத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
இந்தச் சிகிச்சை முறைகள் சொற்களின் உச்சரிப்பு, சொற்களை அமைப்பது, சமூக மொழித் திறன்களின் விருத்தி என்பவற்றை இலக்காகக் கொண்டுள்ளன. மேலும், இக் குழந்தைகளுக்கு சமூகத் தொடர்பாடல் மிகப்பெரியதொரு சவாலாக அமைந்திருப்பதால், மாதவம் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சைகளின் ஊடாக அவர்கள் தொடர்பாடலை ஆரம்பிப்பதற்கு, தொடர்பாடலை வளர்ப்பதற்கு, மற்றும் சமூகத்திறன்களை கற்றுக்கொள்வதற்கு கற்பிக்கின்றது.
பேச்சு இல்லாத பிள்ளைகளுக்கு Augmentative and Alternative Communication – AAC மற்றும் Picture Exchange Communication Systems (PECS) போன்ற முறைகள் உபயோகிக்கப்பட்டு, அவர்களது தொடர்பாடல்கள் இலகுபடுத்தப்படுகின்றன.
ஆரம்பகாலத் தலையீடுகளை மிக இளம் வயதிலேயே தொடங்குவது என்பது நீண்டகாலத் தொடர்பாடல் திறன்களை கணிசமான அளவில் மேம்படுத்துகின்றன என்பதனை ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. பெற்றோர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள சிகிச்சையாளர் குழு ஆகிய இரண்டு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் ஊடாகப் பிள்ளைகளின் வாய்மொழி மற்றும் சமூகத் தொடர்பாடல் என்பவற்றை விருத்தி செய்வதில் மாதவம் முனைப்பாக உள்ளது.
செயல்முறைச் சிகிச்சை
மாதவத்தில் செயல்முறைச் சிகிச்சையானது பிள்ளைகளைத் தங்கள் நாளாந்த வாழ்க்கைக்குத் தேவைப்படும் செயல்களில் ஈடுபடுத்துவதற்குத் தயார் செய்வதனைத் தனது இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், இந்தச் சிகிச்சைமுறையானது பிள்ளைகளுடைய புலனுணர்வு ரீதியான சிக்கல்களை sensory integration therapy மூலம் சரிசெய்தலையும் தனது மற்றொரு இலக்காகக் கொண்டுள்ளது.
தனிமனித தேவைகளான உணவு உண்ணுதல், உடைகள் அணிதல், கழிவகற்றல் போன்ற சுய பராமரிப்புத் திறன்களில் சிரமங்களையுடைய பிள்ளைகளுக்குக் கட்டமைக்கப்பட்ட இடையீடுகளை வழங்குவதன் மூலம் அவர்களது நாளாந்தச் செயற்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன. நுண் இயக்கத் திறன்களான எழுதுதல், பொத்தான் அணிதல், பாத்திரங்களைக் கையாளுதல் போன்றவற்றில் சிரமமுள்ள பிள்ளைகளுக்கு அவற்றைச் சரிசெய்வதற்கான அப்பியாசப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவற்றோடு, பிள்ளைகளின் சமூக மற்றும் விளையாட்டுத் திறன்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.
செயல்முறைச் சிகிச்சைகளின் ஊடாகப் பிள்ளைகள் தங்கள் உணர்வுகளை அடையாளம் காணவும், அவற்றைக்கட்டுப்படுத்தவும் பயிற்சி பெறுகிறார்கள். மேலும், பிள்ளைகள் கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகள் ஊடாகத் தமது சமூக மற்றும் விளையாட்டுத் திறன்களை வளர்க்கும் வகையில் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். பிள்ளைகளது உணர்ச்சிகளைச் சரியாகக் கையாளுதல் மற்றும் அவர்களது நடத்தைகளை நிர்வகித்தல் போன்ற விடயங்களும் முக்கிய கவனம் பெறுகின்றன.
உடற்பயிற்சிசார் சிகிச்சை
ஒட்டிச நிலைமையுடைய பிள்ளைகளுக்காக உருவாக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் உடற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது. உடற்பயிற்சிகளின் ஊடாகப் பிள்ளைகளின் உடலியக்கத் திறன்கள், ஒருங்கிணைப்பு, சமநிலை மற்றும் புலன்சார் தேவைகள் தொடர்பான பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. மாதவத்தில் உடற்பயிற்சி சார்ந்த சிகிச்சை முறையானது அனைத்துச் சிறுவர்களினதும் நாளாந்தச் செயற்பாடுகளில் உள்வாங்கப்பட்டுள்ளது.
மாதவத்தில் ஒவ்வொரு பிள்ளையும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டு, அவரவர் நிலைகேற்ப, அவர்களது புலன்சார் தேவைகளைக் கருத்திற்கொண்டு தனிப்பட்ட உடற்பயிற்சிசார் சிகிச்சை இலக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. பெற்றோர் இந்தச் சிகிச்சையில் தாமும் பங்கேற்பதோடு, மாதவத்தில் கற்றுக் கொடுக்கப்படும் உடற்பயிற்சிகளை வீட்டிலும் பிள்ளைகளைக் கொண்டு செய்விப்பதற்கு ஊக்கவிக்கப்படுகின்றனர். பிள்ளைகளின் நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்யும் பொருட்டு வெவ்வேறு கால இடைவெளிகளில் மீள் கணிப்பீடுகள் இடம்பெறுகின்றன.
மாதவத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், மூன்று மாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி மூலம் பிள்ளைகளின் நடத்தை, சமூக இடர்பாடுகள் மற்றும் உடலியக்கத் திறன்களில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன என்பது சான்றாகியது. அதன் விளைவாக, மாதவத்தில் கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சிச் செயற்பாடானது, அதன் வழக்கமான நாளாந்த சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்வாங்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது தனியார் விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் ஒன்றில் மாதவத்தில் பயன்பெறும் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில விளையாட்டுகளில் பயிற்சி பெறுகின்றனர். ஒட்டிச நிலையை உடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இப்பயிற்சிகள் அவர்களது உடலியல் மற்றும் சமூகம் சார் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்குகளை ஆற்றுகின்றன.
இசையுடன் இணைந்த திறன் மேம்பாட்டுச் சிகிச்சை
இசை, ஒட்டிச நிலையை உடைய பிள்ளைகளுடன் தொடர்புகொள்வதற்கான இனிமையான அனுபவமாக, ஓர் ஊடகமாகக் கருதப்படுகிறது. இசை இத்தகைய சிறுவர்களில் நடத்தை மற்றும் அறிவாற்றல் தளங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது ஆய்வாளர்களின் அனுபவபூர்வமான கருத்து. ஒட்டிச நிலையை உடைய பிள்ளைகளுக்கான சிகிச்சைகளில் இசையின் பயன்பாடானது அவர்களின் கவனச்சிதறல்களைக் குறைப்பதன் மூலம், தளர்வான, பணிசெய்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்குகிறது.
மாதவத்தில், தென்னிந்திய பாரம்பரிய இசைவடிவத்தை அடியொற்றி, ஒட்டிச நிலையை உடைய பிள்ளைகளுக்கான வழக்கமான சிகிச்சைகள் மற்றும் விளையாட்டுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட, ஒரு திறன்மேம்படுத்தல் செயல்முறை மாதிரி வடிவமைக்கப்பட்டு அது வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பிள்ளைகள் தாம் உள்வாங்கும் இசைக்கு எவ்வாறான எதிர்வினைகளை ஆற்றுகின்றார்கள் என்பதனை அவதானித்து, அவர்களின் ஈடுபாடு மற்றும் செயற்பாடுகளை விரிவாக ஆராய்ந்து, அவர்கள் இசையுடனிணைந்த இந்தத் திறன்மேம்படுத்தல் செயல்முறைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய வழக்கமான திறன் மேம்பாட்டுச் செயன்முறைகள் பாதிப்படையாத வண்ணம் வாத்திய இசைக்கோர்ப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை சிகிச்சை அமர்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய மாதிரியில், இசையுடன் கூடிய ஒவ்வொரு அமர்வும் ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் நீடிக்கும் வகையில், ஒரு நாளைக்கு இரண்டு அமர்வுகள் என்னும் அடிப்படையில் இந்தச் சிகிச்சை வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் பிள்ளையுடன் பணியாற்றும் நடத்தைச் சிகிச்சையாளர்கள் ஆகியோரது உள்ளீடுகளின் அடிப்படையில், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏற்றவாறு சிகிச்சையின் கால அளவு, இசையின் தேர்வு, அமர்வின் அமைப்பு மற்றும் இலக்குகள் போன்றவை மாற்றியமைக்கப்படுகின்றன. பெற்றோர்கள் வீட்டிலேயே இந்த அமர்வுகளைத் தொடரவும், அமர்வுகளின் அவதானிப்புகளைப் பதிவு செய்யவும் ஊக்கவிக்கப்படுகின்றார்கள். பிள்ளைகள் அவர்களுடைய முன்னேற்றத்தை மறு மதிப்பீடு செய்வதற்காக தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றார்கள். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் நடத்தைச் சிகிச்சையாளர்கள் அவதானிக்கும் நடத்தைசார் விளைவுகள் மற்றும் அவர்களது கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
தற்போது செயற்படுத்தப்படும் மாதிரி, பிற்புல இசையுடன் மட்டுமே செயற்படுத்தப்படுகின்றது. ஆனால், தேவையேற்படின் அல்லது இசையினால் ஒரு பிள்ளையின் செயற்பாடுகள் மிகவும் சிறப்பாக மேம்படும் பட்சத்தில், அந்தப் பிள்ளை இசையை முறையாகக் கற்கும் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு ஊக்கவிக்கப்படுகின்றது.
இந்தச் சிகிச்சை மாதிரியில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நடத்தை மதிப்பெண்களின் ஆரம்பப் பகுப்பாய்வுகள், பிள்ளைகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதனைக் காட்டுகின்றது. இந்தச் சிகிச்சை மாதிரியில் உள்ஈர்க்கப்பட்ட பிள்ளைகளினது பெற்றோரின் அனுபவங்களும், கருத்துக்களும், திருப்தியும் குறிப்பிடத்தக்க அளவில், ஒரு சிறப்பாக நிலையில் உள்ளது.
மாதவம் ஒட்டிச நிலையை உடைய பிள்ளைகளுக்கான வழக்கமான சிகிச்சை அமர்வுகளில் இசையை இணைத்துக்கொண்டுசெல்வதில் இலங்கையின் முன்னோடிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இது பிள்ளைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களின் நல்வாழ்வைத் தொடர்ந்து மேம்படுத்தும் என மாதவம் நம்புகிறது.
புலன்சார் ஒருங்கிணைப்புச் சிகிச்சை
மாதவத்தின் தினசரி சிகிச்சைகளில் ஒன்றாகப் புலன்சார் ஒருங்கிணைப்புச் சிகிச்சைகள் உள்ளடங்குகின்றன.
பிள்ளைகள் தொட்டுணரக்கூடிய மணல் விளையாட்டு, தமது உடல்நிலை பற்றி உணர்ந்து கொள்ளக் கூடியதான குதித்தல், துள்ளுதல் போன்ற செயற்பாடுகள், உடலின் சமநிலையைப் பேண உதவும் ஊஞ்சலாட்டல் போன்ற செயற்பாடுகளில் பிள்ளைகள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த விளையாட்டுகள் ஒவ்வொரு குழந்தையின் புலன்சார் தேவைகளுக்கு ஏற்ற வண்ணம் மாறுபடும். புலன்சார் ஒருங்கிணைப்புச் சிகிச்சைக்காகப் பலதரப்பட்ட உபகரணங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. சிகிச்சையாளர்கள் ஒவ்வொரு பிள்ளையினதும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து, அவர்களுக்குத் தேவைப்படும் செயற்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்வார்கள். இவற்றின்போது, பெற்றோருக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதால், மாதவத்தில் பயிலப்படும் செயல்முறைகள் வீட்டு சூழலிலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.
மாதவத்தில் மேற்கூறப்பட்ட சிகிச்சைச்சகள் மட்டுமன்றி, மேலும் பல சிகிச்சைசார் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. பெற்றோருக்கான கல்வி, செய்முறைப் பயிற்சிகள், உளவியல் ஆலோசனைகள், மற்றும் சமூக ஆதரவு போன்றவை ஒழுங்கான முறையில் வழங்கப்படுகின்றன. பல்துறைசார் அணுகுமுறை, மற்றும் சிகிச்சைச் செயற்பாடுகளில் பெற்றோரின் பங்கேற்பு என்பவை பிள்ளைகளின் தொடர்விருத்திக்கும், வளர்ச்சிக்கும் உதவக்கூடிய ஓர் ஆதரவான நிலையை வழங்குகின்றன.
சபார்த்தினி சிவபாலன் இயன்மருத்துவர் மாதவம்