கற்றல் என்பதனை அனுபவங்களூடாகவும், அவதானிப்புகளூடாகவும் அறிவு, திறன்கள், விழுமியங்கள், மற்றும் மனப்பாங்குகள் போன்றவற்றை அடையும் ஒரு படிமுறை என வரைவிலக்கணப்படுத்தலாம். மனிதர்களில் கற்றலானது பிறப்பிலிருந்து, அல்லது கருவறையில் இருக்கின்ற காலம் முதல் ஆரம்பமாகின்றது. பிள்ளைகள் தமது பெற்றோரோடும், தம்மைச் சுற்றியுள்ள ஏனையவர்களோடும், தாம் வாழும் சூழலோடும் ஏற்படுத்திக் கொண்டிக்கும் தொடர்ச்சியான இடைவினைகள், மற்றும் அவற்றின் ஒட்டுமொத்த பெறுபேறுகள் ஆகியவற்றினூடாகக் கற்றல் நிகழ்கின்றது. கற்றல் என்பது தொடர்ச்சியான, இயக்கபட்டோடு இருக்கும் ஒரு படிமுறையாகும். அது அறிவுசார், உணர்வுசார், சமூகம்சார், உடலாற்றல்சார் விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் பிரதானமாகத் தமது புலன்களூடான ஆய்வுகள் மூலமும், புலன்சார் முறைவழியாக்கம் மூலமும், தமது தாய்மார், தந்தைமார் மற்றும் பராமரிப்பாளர்களோடு தாம் கொண்டிருக்கும் உணர்வுசார் இடைவினைகள் மூலமும் தமது கற்றலை மேற்கொள்கின்றனர். அவர்கள் தமது புலன்கள், உணர்வுகள், மீண்டும் மீண்டும் ஏற்படுத்தப்படும் இடைவினைகள் என்பவற்றினூடாகச் சுற்றியிருப்பவர்களோடும், நிகழ்வுகளோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பிப்பார்கள். சூழலையும், உலகத்தையும் புரிந்து கொள்ளத் தொடங்குவார்கள். கற்றல் இவ்வாறே நிகழ்கின்றது.
ஒட்டிச நிலையையுடைய பிள்ளைகள் தமது சமூக இடைவினைகளிலும், தொடர்பாடலிலும், புலன்களை முறைவழியாக்கம் செய்வதிலும், சிந்திக்கின்ற முறைகளிலும், மற்றும் அறிவுசார் செயலாக்கங்களிலும் சிரமங்களை எதிர்கொள்வார்கள். ஆதலினால், ஒட்டிச நிலைமையானது தமது சூழலை ஆய்வு செய்து கொண்டும், அதனுடன் தொடர்ச்சியான இடைவினைகளை ஏற்படுத்திக் கொண்டும் நடைபெற்று வருகின்ற சாதாரணமான கற்றல் செயல்முறைகளைப் பாதித்துவிடுகின்றது. குறிப்பாக, ஒன்றைப் பின்பற்றி அதனைப்போல செய்தல், கூட்டாகக் கவனம் செலுத்துதல், பொறுமையாக இருத்தல், கருத்தூன்றல், கட்டளைகளுக்கு எதிர்வினையாற்றுதல், கண்தொடர்பைப் பேணுதல், பெயர் சொல்லி அழைக்கும்போது அதற்கு எதிர்வினையாற்றுதல் போன்ற கற்றலுக்குத் தேவைப்படும் பல விடயங்களை ஒட்டிசம் வெவ்வேறு அளவுகளில் பாதித்து விடுகின்றது.
ஒட்டிசத்திற்கும்,அதனைையொத்த ஏனைய நிலைகளுக்குமான ஆரம்ப இடையீடுகள் அப்பிள்ளைகளுக்குத் தேவைப்படும் அடிப்படையான ஆரம்பக் கற்றல் திறன்களின் விருத்தியை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. ஒட்டிச நிலையையுடைய பிள்ளைகள் தமது ஆரம்பக் கற்றல் திறன்களில் தேர்ச்சி பெறாதுவிடின், அவர்கள் வளர்ந்து வருகின்றபோது தமக்குத் தேவைப்படும் சிக்கல்தன்மையுடைய கற்றல் மற்றும் கல்விசார் திறன்களைப் பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமங்களை அனுபவிப்பார்கள். எனவே, ஒட்டிசமுடைய பிள்ளைகளைக் கையாளும்போது, முதற்படியாக அவர்களது கற்றலுக்குத் தேவைப்படும் முன்னாயத்தத் திறன்களிலுள்ள பற்றாக்குறைகளை அடையாளங் கண்டு, அவற்றை நிவர்த்தி செய்வது முக்கியமானது. முன்னாயத்தத் திறன்கள் எனப்படுபவை கற்றலுக்குத் தேவைப்படும் ஓர் அடித்தளத்தை இடுவதில் முக்கியமானவை. அந்த அடித்தளத்தின் மேலேயே ஏனைய திறன்கள் கட்டமைக்கப்படுகின்றன. இன்னுமொரு வகையில் கூறினால், கற்றலுக்குத் தேவைப்படுகின்ற சிக்கலான திறன்கள், கல்வியோடு தொடர்புடைய எண்ணக் கருக்கள் போன்றவற்றை வளர்த்தெடுப்பதற்கு முன்னால், பிள்ளைகள் தமது அடிப்படையான கற்றல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கற்றலுக்கான முன்னாயத்தத் திறன்கள் கவனிக்கப்படாமல் விடப்படும்பொழுது, அது பிள்ளைகளின் கற்றல் மற்றும் அவர்களது திறன்விருத்தியாக்க படிமுறைகளில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும். எனவே, ஒட்டிசம் உடைய ஒரு பிள்ளையின் கணிப்பீடுகளில், அந்தப் பிள்ளையிடம் கற்றலுக்குத் தேவைப்படும் முன்னாயத்தத் திறன்கள் எந்த அளவில் இருக்கின்றன என்ற விடயமும் ஆராயப்படும். அதுபோல, அந்தப் பிள்ளைக்குத் தேவைப்படும் இடையீடுகளைத் திட்டமிடுகின்ற பொழுதும், அந்தப் பிள்ளை எவ்வாறான முன்னாயத்தத் திறன்களில் தேர்ச்சி பெறவேண்டியிருக்கின்றது என்ற விடயம், அநேகமாக ஓர் ஏறுவரிசை அடிப்படையில், உள்ளடக்கப்படும்.
உதாரணமாக, ஓர் ஆசிரியர் ஒரு பிள்ளைக்கு எழுத்தாற்றலை மேம்படுத்துவதற்கான திறன்களைக் கற்பிப்பதற்கு முன்னர், அந்தப் பிள்ளை பொறுமையாக இருத்தல், பிரதிபலிக்கும் ஆற்றல், நுண்ணிய தசைஇயக்க ஆற்றல், கிரகிக்கும் ஆற்றல், எளிமையான கட்டளைகளுக்கு எதிர்வினையாற்றும் திறன், மற்றும் எழுத்துக்களை அடையாளம் காணும் திறன் போன்ற விடயங்களில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேற்ககுறிப்பிடப்பட்ட விடயங்களில் தேர்ச்சி பெறாது, ஒரு பிள்ளை எழுதுவதற்குக் கற்றுக் கொள்ள முடியாது. இவையனைத்தையும் ‘எழுதுவதற்குக் தேவைப்படும் முன்னாயத்தத் திறன்கள்’ என விளங்கிஓ கொள்ளலாம். எனவே பெற்றோராகவும், ஆசிரியராகவும் இருக்கின்ற நாங்கள், ஒரு பிள்ளையிடம் எழுத்தாற்றலை வளர்த்தல் என்ற ஓர் இலக்கு நோக்கிய கற்பித்தலைத் தொடங்கும் முன்னர், அந்தப் பிள்ளை அதற்குத் தேவைப்படும் அனைத்து முன்னாயத்தத் திறன்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
வாய்ப்புகளை உருவாக்குதல் என்பது பிள்ளைகளது திறன்களை விருத்தி செய்வதில் அளப்பரும் பங்காற்றுகின்றது. பொதுவாக சிறுவர்கள் அனைவருக்கும், குறிப்பாக ஒட்டிசமுடைய சிறுவர்களுக்கு, கற்றலுக்கான திறன்களை வளர்ப்பதற்கும், அவற்றை பிரயோகித்துப் பார்ப்பதற்குமான சந்தர்ப்பங்களைப் பெறுவதற்கும் நாம் ஏராளமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். எந்த ஒரு பிள்ளையின் கற்றல் படிமுறைக்கும் சரியான அளவில் தூண்டல்கள் உள்ள ஓர் உகந்த சூழல் அவசியமாகும். அத்தோடு, ஒட்டிசம் நிலையை உடைய பிள்ளைகளுக்கு பொதுமைப்படுத்துதல் என்னும் விடயமும் மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட திறன்களை வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களோடு, வெவ்வேறு சூழ்நிலைகளில் பிரயோகித்துப் பார்ப்பதற்குரிய சந்தர்ப்பங்களை அவர்களின் சிகிச்சையாளர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் வழங்க வேண்டும்.
ஓட்டிசமுடைய பிள்ளைகளின் கற்றல் விளைவுகளை மேம்படுத்தக்கூடிய பல மூலோபாயங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில கீழே விவரிக்கப்பட்டிருக்கின்றன.
- சூழல் மறுசீரமைப்பு: நன்கு கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, எதிர்பார்க்கக்கூடிய, கவனக் கலைப்பான்கள் குறைந்த, புலன்களுக்கான தூண்டல்கள் குறைவாக உள்ள ஒரு சூழலானது ஓட்டிச நிலையுடைய பிள்ளைகள் தமது கல்வி இலக்கை அடைவதற்குத் தேவைப்படும் கவனக் குவிப்பை வழங்கும்.
- கட்புல உதவிச்சாதனங்கள்: ஓட்டிச நிலையுடைய பல பிள்ளைகள் கட்புலனூடாகக் கற்றுக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். அதனால், அவர்கள் தாங்கள் கேட்பவற்றிலிருந்து அல்லது மற்றவர்கள் சொல்வதிலிருந்து கற்றுக் கொள்வதிலும் பார்க்க, தமது கட்புலத் தூண்டல்களூடாகவே அதிகம் கற்றுக் கொள்கின்றார்கள். எனவே, சிகிச்சையாளர்களும், கல்வியியலாளர்களும் கட்புலனூடாக உள்வாங்கக்கூடிய வகையில் நிகழ்ச்சி நிரல், நினைவுபடுத்தும் குறியீடுகள், சமூகக் கதைகள், மற்றும் எழுதப்பட்ட சொற்கள் போன்றவற்றை உபயோகித்தல் பிரயோசனமானது
- அறிவுறுத்தல்கள்: சிக்கலான ஓர் இலக்கொன்றை அல்லது நடத்தையைக் கூறு பிரித்து, அதன் ஒவ்வொரு படியையும் தெளிவான, சரியான சொற்களை உபயோகித்து அறிவுறுத்துகின்றபோது, பிள்ளைகள் அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது இலகுவாயிருக்கும்.
- மீள்வலியுறுத்தும் நுட்பங்கள்: ஒரு பிள்ளை ஏதாவது ஒரு விரும்பத்தக்க நடத்தையை வெளிக்காட்டும் பொழுது அதற்குரிய தகுந்த பலாபலன்களை வழங்கினால், அந்தப் பிள்ளை எதிர்காலத்திலும் அதே விதமான நடத்தையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகின்றன. நடத்தை சிகிச்சையில் இதனை மீள்வலியுறுத்தல் என அழைப்பர். இங்கு குறிப்பிடப்பட்ட உதாரணம் நேர் மீள்வலியுறுத்தி எனும் வகையைச் சார்ந்தது. அது பிள்ளையினுடைய தன்னம்பிக்கையையும், சுயகணிப்பீட்டையும் அதிகரிக்கும். மீள்வலியுறுத்திகளானவை புதிய விடங்களைக்கற்பதற்கும், சவாலான நடத்தைகளைக் குறைப்பதற்கும், நேர் இடைவினைகளை மேம்படுத்தவும் உபயோகிக்கப்படுகின்றன.
- இலக்குகளைச் சிறு பகுதிகளாகப் பிரித்தல்: ஓட்டிசமுடைய பிள்ளைகளுக்கான இலக்குகளைச் சிறிய, சிறிய பகுதிகளாகப் பிரித்து, அவர்களால் சமாளிக்கக்கூடிய அளவில் வழங்குகின்றபோது, அது அவர்களது பதட்டத்தைக் குறைத்து, கவனத்தைச் சீராக்கி, மற்றவர்களில் தங்கியிராது தாமாகவே அவற்றைச் செய்துமுடிக்கக்கூடிய வல்லமையை வழங்கும்.
- மாறுநிலைக்குத் தயாராக்குதல்: ஒரு விடயத்தில் இருந்து இன்னுமொரு விடயத்திற்கு, அல்லது ஒரு நிகழ்விலிருந்து வேறொரு நிகழ்விற்கு மாறுதல் என்பது ஓட்டிசமுடைய பிள்ளைகளுக்கு மிகுந்த சிரமங்களையும், பிரச்சினைகளையும் கொடுக்கின்றது. எனவே, அவ்வாறான தேவைகள் ஏற்படுகின்றபோது பிள்ளைகளை மாறுநிலைக்குத் தயாராக்குதல் வேண்டும். அதற்காகக் கட்புல நிகழ்ச்சி நிரலை உபயோகிக்கலாம், சமூகக் கதைகளைக் கூறலாம், அல்லது நேரங்காட்டி ஒன்றை உபயோகிக்கலாம். பிள்ளைகளை மாறுநிலைக்குத் தயாராக்குகின்றபோது, அது அவர்களின் பதகளிப்பை குறைத்து விடுவதோடு, மாற்றங்கள் நடைபெறும்போத அவர்களால் வெளிப்படுத்தப்படும் சவாலான நடத்தைகளையும் குறைத்து விடுகின்றது. மேலும், அந்தத் தயாரிப்படுத்தல்கள் அவர்கள் தாமாகவே இயங்குவதற்கும் வழிவகுக்கின்றது.
ஓட்டிசத்தைப் பொறுத்தளவில் சவாலான நடத்தைகள் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒரு பொதுவான விடயமாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நடத்தை சிகிச்சைகளின் உத்திகளை உபயோகித்து, அவர்களது சவாலான நடத்தைகளைக் குறைத்து, கற்றல் படிமுறைகளை இலகுபடுத்தி, நல்ல பலாபலன்களைப் பெற்றுக்கொள்ளலாம். சிறுவர்களின் பலங்களையும், பலவீனங்களையும் அடையாளங்கண்டுகொள்ளல் என்பது கற்றல் கற்பித்தல் படிமுறையில் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகக் கொள்ளப்படுகின்றது. அது ஒரு பிள்ளையின் கற்றல்திறனை அதிகரிப்பதோடு, பெற்றோர், ஆசிரியர் மற்றும் சிகிச்சையாளர்கள் ஆகியோர் அந்தப் பிள்ளையைக் கையாளுகின்றபோது கடினமாக பாடுபடவேண்டிய தேவையையும் குறைத்து விடுகின்றது. மீள்வலியுறுத்தல், அடிஎடுத்துக் கொடுத்தல், இலக்குப்பகுப்பாய்வு, மாதிரி காட்டல், தொடராக்கல் போன்ற உத்திகளை உபயோகிக்கின்றபோது, அவை கற்றல் செயல்பாடுகளை விரைவுபடுத்துகின்றன.
ஓட்டிச நிலையுடைய பிள்ளைகளிடையே கற்றலையும் கல்விச் செயல்பாடுகளையும் மேம்படுத்துகின்றபோது, ஒவ்வொரு பிள்ளையும் தனித்துவமானது என்பதனையும், அது தனக்கே உரிய பலங்களையும், சிரமங்களையும், எல்லைப்படுத்தல்களையும் கொண்டிருக்கின்றது என்பதனையும் நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். எனவே, அவற்றிற்கேற்ப, நாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏற்றவிதமாக வடிவமைக்கப்பட்ட அணுகுமுறைகளை உபயோகிக்க வேண்டும். பிள்ளையை மையப்படுத்திய அணுகுமுறையோடு, சிகிச்சைப்படிநிலைகளில் குடும்ப உறுப்பினர்களையும், பராமரிப்பாளர்களையும் ஈடுபடுத்தும் குடும்பங்களை மையப்படுத்திய அணுகுமுறையையும் கொண்டிருப்பது நல்லது. எந்த இடையீடுகளாயினும், அவை பிள்ளையினது நாளாந்த விடயங்களோடு சம்பந்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேற்ககுறிப்பிடப்பட்ட விடயங்கள் இயல்பான ஒரு குடும்பச் சூழலில் மிகவும் பொருத்தமான அணுகுமுறைகளாக அமைந்திருக்கும்.
அனைத்துப் பிள்ளைகளையும்போல, ஓட்டிசமுடைய பிள்ளைகளும் தமக்கான தனித்துவமான கற்றல் முறைகளையும், கல்விசார் திறன்களையும், நடத்தைசார் சவால்களையும் கொண்டிருப்பார்கள். இந்தச் சூழமைவில், ஓட்டிசமுடைய பிள்ளைகளின் பராமரிப்பில் நன்றாக யோசித்து, நன்றாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான கல்வித்திட்ட வரைபு முக்கியத்துவம் பெறுகின்றது. வழக்கமான கல்வி ஓட்டத்தோடு இணைவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு நன்கு திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்படும் தனித்துவமான கல்வித்திட்ட வரைபொன்றினூடாக ஆதரவு வழங்கலாம்.
தனித்துவமான கல்வித்திட்ட வரைபு என்பது ஓட்டிசம் மற்றும் ஏனைய நரம்பு விருத்தியோடு தொடர்புடைய நிலைகளை உடைய பிள்ளைகளுக்கு என உருவாக்கப்படும், பிள்ளையை மையப்படுத்திய ஓர் எழுத்து மூலமான ஆவணமாகும். இந்தத் திட்ட வரைபில், பிள்ளைகளது தனித்துவமான கல்விசார் இலக்குகள், கற்றல் தொடர்பான தேவைகள், மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் சேவைகள் போன்ற விடயங்கள் எழுதப்பட்டிருக்கும். ஓட்டிச நிலையுடையவர்களுக்குத் தேவைப்படும் குறிப்பான ஆதரவுகளை வழங்குவதற்குக் கல்வியாளர்கள், பெற்றோர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் ஏனைய சேவை வழங்குநர்களை வழிநடத்தும் ஒரு சாலை வரைபடமாக இந்தத் திட்ட வரைபு அமைந்திருக்கும். குறிப்பாக, ஓட்டிச நிலையுடைய ஒரு பிள்ளை கல்விச் சூழல் ஒன்றில் தனது முழுமையான ஆற்றல் வளங்களை அடைவதற்கு உதவுகின்ற ஒரு முக்கியமான பணியை இந்தத் தனித்துவமான கல்வித்திட்ட வரைபு ஆற்றுகின்றது.
பொதுவாக, தனித்துவமான கல்வித்திட்ட வரைபொன்றின் உருவாக்கத்தில் ஒரு பல்துறைசார் குழு ஈடுபடும். இந்தக் குழுவில் பிள்ளையின் பெற்றோர், பாடசாலை நிர்வாகம், பொதுவான மற்றும் விசேடதேவைகளுடைய பிள்ளைகளுக்கான ஆசிரியர்கள், பேச்சு மொழிச் சிகிச்சையாளர், செய்முறைச் சிகிச்சையாளர், நடத்தைச் சிகிச்சையாளர், இயன்முறைச் சிகிச்சையாளர் போன்ற பலர் இருப்பார்கள். ஒரு முறைசார் தனித்துவமான கல்வித்திட்ட வரைபானது பிள்ளையினுடைய கற்றல் இடர்பாடுகளின் தன்மை யாவை? அதற்கு எந்தவிதமான உதவிகள் தேவைப்படுகின்றன? அந்த உதவிகளை யார் யார் வழங்குவார்கள்? பிள்ளையினுடைய கற்றல் செயல்முறைக்கு விசேட உபகரணங்கள் தேவைப்படுகின்றனவா? அவ்வாறாயின் அவை எவை? பிள்ளைக்குத் தேவைப்படும் உதவிகள் எங்கே, எப்போது, யாரால், எவ்வளவு கால இடைவெளியில் வழங்கப்படும்? வீட்டில் பெற்றோர் எவ்வகை ஆதரவுகளை வழங்க வேண்டும்? பிள்ளைக்கு மருத்துவத் தேவைகள் இருக்கின்றனவா? எவ்வகையான கண்காணிப்பு மற்றும் மீளாய்வு ஏற்பாடுகள் உள்ளன? அடைவுகளை அல்லது வெற்றியை எவ்வாறு அளவீடு செய்வது? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும்.
கற்றல் மற்றும் ஏனைய கல்விச் செயல்பாடுகள் யாவும் ஒருவரது சிறுபிராயத்துடன் முடிந்துவிடல அல்ல. அவை என்றென்றும் தொடர்பவன. ஆகவே, ஆட்டிசத்தின் நீண்டகாலப் பராமரிப்பில் பங்கு வகிக்கும் வெவ்வேறு பங்குதாரர்களோடு நாம் எப்போதும் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டும்.
Dr.தர்மிளா சிவபாதமூர்த்தி வைத்தியர் மாதவம்