ஒட்டிசம் மற்றும் அதனுடன் இணைந்ததான நிலைமைகள் மூளை விருத்தியுடன் தொடர்புடைய கோளாறுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றன. அந்தச் செல்நெறி இலங்கையின் வடக்கு மாகாணத்தையும் பாதித்திருக்கின்றது. கடந்த பல ஆண்டுகளாக, ஒப்பீட்டளவில் புதியதாகத் தோன்றும் இந்தப்பிரச்சினைக்கு, ஓர் இணைந்த, முழுமையான, விரிவான சேவை வழங்கலை மேற்கொள்ள வேண்டியதன் தேவையை வடக்கு மாகாணத்தின் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்தார்கள்.
இந்தப்பின்னணியில், உளமருத்துவப் பேராசிரியர் சா. சிவயோகன் அவர்களின் தூரநோக்கான சிந்தனைக்கு அமைவாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் சுகாதார சேவை வழங்குனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுசுகாதார நிபுணர்கள் மற்றும் நிர்வாகத்துறை விற்பன்னர்கள் போன்றவர்களைப் பெரும் எண்ணிக்கையில் உள்ளடக்கிய பங்காளர்கள் குழுவொன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்களுக்கிடையேயும், கூட்டாகவும் மேற்கொண்ட பல அமர்வுகளின் பெறுபேறாக, ஒட்டிசம் தொடர்பாக வடமாகாணத்திற்குரிய தெளிவான நோக்கினையும், ஒருங்கிணைந்த செயற்பாட்டினையும் உறுதிப்படுத்திக் கொள்ளல், ஒட்டிசம் நிலைமையினால் பாதிக்கப்பட்ட தனிநபர்களது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துதல, ஒட்டிசம் நிலையைுடையவர்களது உரிமைகளையும் கௌரவத்தினையும் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் ஆதரித்தல், ஒட்டிசம் நிலைமையினால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் உதவி வழங்குவோருக்குப் பொருத்தமான ஆதரவுகளை வழங்கக்கூடிய வகையில் சுகாதாரம், கல்வி, சமூக நிறுவனங்கள் மற்றும் ஏனைய பொது சேவைகளின் செயல்திறனை அதிகரித்தல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட ஒரு கொள்கை வரைபு உருவானது. ஒட்டிசம் நிலைமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்பக் கட்டத்தில் அடையாளம் காணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்தக் கொள்கை வரைபு எதிர்வு கூறுகின்றது.
இந்தக் கொள்கை வரைபின் பரிந்துரைகள் ஏழு கருப்பொருள்களாக வகைப்படுத்தப்பட்டன: விழிப்புணர்வு மற்றும் உணர்திறன், அடையாளம் காணல், மதிப்பீடு மற்றும் ஒட்டிசம் நிலையினை நிர்ணயம் செய்தல், கல்வி மற்றும் கற்றல் செயற்பாடுகள், சிகிச்சை, புனர்வாழ்வு, மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு, சமூகத்தில் ஒன்றிணைந்து வாழ்தல், தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கான ஆதரவு, நிபுணத்துவ விருத்தி. கொள்கையைச் செயற்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகிய ஏழு அம்சங்கள் இந்தக் கொள்கை வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொள்கை வரைபின் உருவாக்கச் செயல்முறையின்போது, கனடாவிலிருந்து வருகை தந்து, யாழ்ப்பாண மருத்துவ பீடத்துடன் இணைக்கப்பட்டிருந்த மாணவர் தன்னார்வலர்கள் பல வழிகளில் பங்களிப்பு வழங்கினார்கள். அது மிகவும் பாராட்டத்தக்கது. வடக்கு மாகாணத்திற்கான ஒட்டிசம் கொள்கை வரைபானது முதலில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டது, பின்னர் அது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.


வடக்கு மாகாணத்திற்கான ஒட்டிசம் கொள்கையானது இலங்கையில் ஒட்டிசம் தொடர்பாக உருவாக்கப்பட் முதலாவது கொள்கையாக அமைந்திருக்கின்றது. இந்தக் கொள்கை ஒட்டிசம் தொடர்பான நிலைமைகளின் பன்முகத்தன்மையையும், அவை எவ்வாறு ஒட்டிசம் நிலை உடையவர்களையும், அவர்களது பராமரிப்பாளர்களையும் பாதிக்கின்றன என்பதனையும் ஏற்றறிவிக்கின்றது.
வடக்கு மாகாணத்திற்கான ஒட்டிசம் கொள்கையானது வட மாகாண சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளால் கூட்டாக வெளியிடப்பட்டது. அது உத்தியோகபூர்வமாக 19.07.2017 அன்று யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் வடமாகாண சபையின் முதலமைச்சர் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த அறிமுக விழாவில் மாகாணசபை அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், பணிப்பாளர்கள், சுகாதாரசேவை வழங்குநர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏனைய பங்காளர்கள் கலந்து கொண்டிருந்தனர். செரண்டிப் சிறுவர் இல்லமானது இந்த நிகழ்விற்குப் பகுதியளவில் ஆதரவு வழங்கியிருந்தது.
எனினும், வடமாகாணத்திற்கான ஒட்டிசம் தொடர்பான கொள்கை வரைபானது இன்னமும் சட்டரீதியில் சரிபார்க்கப்படவில்லை. அது விரைவில் நடக்கும் என்பதை நாம் உறுதி செய்வோம்.
கோ.கிருஷ்ணகுமார் திட்டமிடல் மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் சுகாதார அமைச்சு வடக்கு மாகாணம்