மாதவத்தின் தோற்றமானது ‘மனமுண்டால் இடமுண்டு ’ என்ற பொன்னான பழமொழிக்கு ஒரு சான்றாகும். அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட மாதவம் இலாபநோக்கமற்ற ஒரு தனித்துவமான நிறுவனமாக வளர்ந்தது. இந்த நிறுவனம் தன்னை மூளை மற்றும் நரம்புவிருத்திகளுடன் தொடர்புடைய குழந்தைகளுக்கு வலுவூட்டும் ஒரு பிரதான சக்தியாக நிலைநிறுத்துவதற்கு கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
மாதவம் ஒரு முதன்மை நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தவும், அங்கு வழங்கப்படும் மூளை மற்றும் நரம்புசார் விருத்தி தொடர்பான சேவைகளின் தரம் மற்றும் அளவு போன்றவற்றை விரிவுபடுத்தவும், அதற்கு ஏனைய சுகாதாரத்துறைசார் நிறுவனங்கள் போன்ற ஒரு நிலையான கட்டமைப்பையும், நியம இயக்க நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக அறுநூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வலுவூட்டிய ஒரு நிறுவனம் இன்றுவரை ஒரு தனியாருடைய வாசஸ்தலத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது என்பது துரதிஷ்டவசமானது.
இதற்குரிய பிரதான காரணமாக, பாரம்பரியமான சேவைகளை வழங்குவதில் ஊறித்திளைத்த சுகாதார நிர்வாகக் கட்டமைப்புகள், அண்மைக்காலத்தில் முகிழ்த்தெழுந்த விரிநிலை நரம்புசார் இயல்புகளை உடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் வழங்கப்பட வேண்டிய சேவைகளை வழங்குவதில் ஆர்வமும் அனுபவமும் இல்லாமல் இருப்பதனைச் குறிப்பிடலாம். அத்தகைய சேவைகளை வழங்குவதற்கு புதுமையான சேவைக்கட்டமைப்புகள் தேவைப்படுவதும் இத்தகைய பின்னடைவுக்கான மற்றுமொரு காரணமாகும்.
தனது பதினொரு வருடகாலப் பயணத்தின் பின்னர், ஒரு செழிப்பான கலாச்சாரத்தையும், கற்றல் செயல்பாடுகளையும், நுண்ஆய்வு வளர்ச்சியையும், சர்வதேச அறிவு ஊடாட்டத்தையும் கொண்டுள்ள பின்னணியிலும் மாதவம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் இன்னமும் புதிரானதாகவே உள்ளன. மாதவத்தின் எதிர்காலச் செயல் திட்டம் என்ன? எப்படியான வழிமுறைகள் மாதவத்தை நின்று நிலைத்துச் சேவையாற்ற உதவும்? மாதவத்தின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு? தற்போதைய நிலையில் மாதவம் யாருடைய குழந்தை? கேள்விகளின் பட்டியல் நீளமானது.
மாதவமானது பொதுமக்களிடையேயும், சுகாதாரப் பணியாளர்களிடையேயும், மற்றும் பலரிடையேயும் ஒரு கணிசமான அளவு ஒட்டிசம் பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் புகட்டியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. கடந்த காலங்களில் உலக நெறிமுறைகளுக்கு ஒப்பாகவும், பண்பாட்டோடு ஒத்திசையக்கூடிய தனது சொந்த வழிமுறைகளாலும் மாதவம் பொருத்தமான மற்றும் அவசியமான இடையீடுகளைக் கணிசமான பிள்ளைகளுக்கு வழங்கி அவர்களைப் வழிப்படுத்தியுள்ளது. பல பிள்ளைகள் பாடசாலை சென்று முறைசார் கல்வியைப் பெறுகிறார்கள். அவர்களில் சிலர் கல்வியில் பிரகாசிக்கிறார்கள். ஏனையவர்கள் பாடசாலைகளில் இருந்துகொண்டு சமூக ஊடாட்டத்திற்குத் தேவைப்படும் திறன்களை வளர்க்கிறார்கள்.
ஒரு வகையில் மாதவம் அதன் பிரதான நோக்கங்களான ஒட்டிசம் நிலைமையை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல், தரமான மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல், ஆரம்பகட்டத் தீவிர இடையீடுகளை வழங்குதல் போன்றவற்றில் வெற்றி கண்டுள்ளது. மாதவத்தால் கடந்த பதினொரு வருடங்களாக வழிநடத்தப்பட்டு வந்த பல குழந்தைகள் இன்று வளர்ந்து, தமது கட்டிளம்பருவத்தை எட்டியுள்ளர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒட்டிசம் என்பது ஒருவரது வாழ்வுக்காலம் முழுவதிலும் பிரதிபலிக்கும் ஒரு நிலைமை என்பது தெரிந்ததே. ஒட்டிசம் நிலைமையுடையோரின் வாழ்வானது ஒரு சாதாரண குடிமகனுடைய வாழ்வைவிட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. அப்படி இருக்கையில், மாதவம் தனது வளர்ந்த பிள்ளைகளுக்கும், ஒட்டிசம் நிலைமையுடைய ஏனையோருக்கும் எந்த அளவிற்கு உறுதுணையாக உள்ளது என்பது கேள்வியே. அவர்களின் வாழ்க்கையின் முற்பகுதியில் ஒளியூட்டி உறுதுணையாக இருந்த மாதவம், அவர்கள் வளர்ந்ததன்பிறகு அந்தப் பிள்ளைகளையும் பெற்றோர்களையும் வழிகாட்டத் தவறியுள்ளது என்பது ஒரு பெரும் குறை ஆகும். இக்காரணத்தினால், அந்தச் குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் மாதவத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் படிப்படியாகக் குறைந்து செல்வதுடன், ஈற்றில் முற்றிலுமாக அறுந்து விடுகின்றது. எமது பிரதேசத்தில் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக் குறைபாடுகளுடைய குழந்தைகளுக்கு என்த் தன்னை அர்ப்பணிப்புச் செய்த ஒரு முதன்மை நிறுவனம் என்ற காரணத்தினால் அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு மாதவத்திற்கு உண்டு.
தொழில்சார் வல்லுனர்கள், சிகிச்சை உதவியாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், மற்றும் இதர சேவையாளர்களின் பற்றாக்குறையானது மாதவத்தின் நீண்டகால சேவை வழங்குதல்களைக் மட்டுப்படுத்தும் பிரதான காரணிகளாக உள்ளன. இவ்வாறான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மாதவத்திற்கு வெளியில் உள்ள துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பு, மாதவத்துடன் அவர்களுடைய இணைந்த பயணம் போன்ற அர்த்தமிக்க தொடர்புகளை, இந்தக் குழந்தைகளின் நலனுக்காக, மாதவம் உருவாக்கிக் கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது.
மாதவம் மூளை மற்றும் நரம்புசார் விருத்தி குறைபாடுகளுள்ள பிள்ளைகளுக்கான சேவைகளை வழங்கும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து போட்டித் தன்மையற்ற ஒரு குறைநிரப்புப் பண்பாட்டை உருவாக்க வேண்டும். ஒட்டிசம் என்பது விஞ்ஞாத் துறையை இன்றும் ஒரு புதிரிலேயே ஆழ்த்தி வைத்திருக்கின்றது. ஒட்டிசத்துக்கெனப் பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் இருப்பினும், அவை எந்த அளவிற்குப் பயன்படுகின்றன என்பதனைத் தெள்ளத் தெளிவாக நிரூபிக்க முடியாதுள்ளது. இவ்வாறான ஒரு நிச்சயமற்ற நிலைமை இருக்கும்போது, ஒட்டிசத்தோடு பணிபுரியும் பல்வேறுபட்ட நிறுவனங்களும் ஒருங்கிணைந்த ஒரு பாதையில் ஒன்று சேர்ந்து பயணிப்பதே, நீண்டகாலத்தில் சிறுவர்களையும், கட்டிளம் பருவத்தினரையும், வயது வந்தவர்களையும் சாதாரண வாழ்க்கை முறைமைக்குள் உள்வாங்குவதயகு உகந்ததான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும். எனவே, மாதவம் ஒரு திறந்த கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளுடனும் ஒரு அர்த்தபூர்வமான, ஆரோக்கியமான தொடர்புகளை ஏற்படுத்துவது அவசியமானது.
குறிப்பாக, எல்லாத்துறைகளையும் இணைக்கும் ஒரு புள்ளியாக, ஒரு மையமாக, ஒவ்வொருவரும் தத்தமது சேவைகளை அறிமுகப்படுத்தவும், தமது அனுபவங்களைப் பகிரவும், புதியவற்றை கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு தளமாக மாதவம் உருமாறலாம். மேலும், தொழில்சார் கல்வியை ஊக்குவிக்கவும், பொழுதுபோக்கு அம்சங்களை விருத்தி செய்யவும் மாதவம் எதிர்காலத்தில் முனைப்புக் காட்டலாம்.
கடந்த பல வருடங்களாக மாதவம் தனது குழந்தைகளை முறைசார் கல்வித்திட்டத்தில் உள்வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது அரச கல்வித் திணைக்களத்துடன் இணைந்து பயணிக்க முற்படுகின்றது. மாதவத்தின் ஆரம்ப நிகழ்வில் சுகாதாரத்துறை அதிகாரிகளும், கல்வித்துறைசார் உயர் அதிகாரிகளும் ஒன்றாகவே பங்கேற்றனர். இதன் மூலம் இரண்டு துறைகளுக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோன்று, வடமாகாணக் கல்வி அமைச்சும், வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்தே 2017ஆம் ஆண்டில் வடமாகாணத்திற்கான ஒட்டிசம் கொள்கை ஒன்றை பலத்த எதிர்பார்ப்புகளுடன் வெளியிட்டன. சுகாதாரம், கல்வி ஆகிய இரண்டு துறைகளுக்குமிடையே ஒரு பொதுப்படையான புரிந்துணர்வு இருப்பினும், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று, முறையான திட்டமிடலுடன் கூடிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை நடைமுறைப்படுத்தும் ஏற்பாடுகள் இன்றுவரை செயற்படுத்தப்படவில்லை. நிர்வாகமட்டத்தில் ஏற்படுத்தப்படும் தடைக்கற்களும், ஏனைய நிறுவனங்களை அனுசரித்துப் பயணிக்காத ஒர் உப பண்பாடும் இதற்கான பிரதான காரணங்களாக அமைந்திருக்கின்றன.
பொதுவாக ஒட்டிசம் நிலைமை என்பது பலருக்கு ஒரு வாழ்நாள் சவாலாகும். அப்படியானவர்களுக்கான சமூகத் தேவைகளை சமூக சேவைத் திணைக்களத்தினால் மட்டுமே வழங்க முடியும். எனவே மூளை மற்றும் நரம்புசார் விருத்தி தொடர்பான பிள்ளைகளினதும், குடும்பங்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமூகசேவைகள் திணைக்களத்தோடு ஒன்றிணைந்து பயணிப்பதே சாலச் சிறந்தது. விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மற்றைய பிள்ளைகளுக்கு கிடைப்பது போன்ற சந்தர்ப்பங்களை வழங்குதல், அவர்களுக்குப் புனருத்தாரணம் அளித்து, அவர்களுக்குத் தேவைப்படும் தொழில்சார் பயிற்சிகளை வழங்குதல் ஆகிய இரண்டும் சமூகசேவைத் திணைக்களத்தின் பிரதான இலக்குகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இதற்கு மேலதிகமாகத் தங்குமிட வசதி, நிதிஉதவி, வதிவிடப் பராமரிப்பு, ஒட்டிசத்துகான உகந்த சூழலை ஏற்படுத்துதல் , பொருத்தமான பொழுதுபோக்குச் செயற்பாடுகளை உருவாக்குதல் என்பனவும் சமூகசேவை திணைக்களத்தினால் வழங்கக் கூடிய சேவைகளாகும். இருப்பினும், சமூகசேவைகள் திணைக்களத்தின் குறிக்கோள்களுக்கும், அது நடைமுறைப்படுத்தும் சேவைகளுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருப்பதாகவே கருதமுடிகிறது. அதுவும் விரிநிலை மூளைத்திறனுடைய பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மற்றும் வழங்குகின்ற சேவைகளில் அதிக இடைவெளி காணப்படுகிறது. எதிர்காலத்தில் சமூகசேவைகள் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு, அந்த இடைவெளியின் பாரதுரமான விளைவுகளை உணரவைக்க வேண்டிய , அவற்றைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடு மாதவத்திற்கு உள்ளது.
சுகாதாரத் திணைக்களமும் மற்றும் சுகாதார சேவைகளும் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சியுடன் தொடர்பட்ட நிலைமைகளையுடைய குழந்தைகளினது தேவைகளைச் சரிவரப் பூர்த்தி செய்கின்றனவா என்பதனையும் உற்று நோக்க வேண்டியுள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு குழந்தை மருத்துவத் துறையும், ஏனைய மருத்துவத்துறைகளும் ஈடுபட்டுப் பூர்த்திசெய்யவேண்டிய அளவுக்கு அவர்களுக்கே உரிய பல மருத்துவப் பிரச்சினைகளும், இதர மருத்துவத் தேவைகளும் உள்ளன. குறிப்பாக, இந்தக் குழந்தைகளும் பெற்றோர்களும் ஒரு அரசாங்க வைத்தியசாலையில் தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் சிம்ம சொப்பனமாக இருக்கும். இந்தப் பிரதேசத்தில் உள்ள எந்த ஒரு அரச வைத்தியசாலையும் இந்தக் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் தயாரிப்படுத்தப்படவில்லை. அரச வைத்தியசாலைகளில் ஒட்டிசம் இயல்புடைய குழந்தைகளைப் பராமரிக்கக்கூடிய சிறப்பான விடுதியோ, சிகிச்சைச் கூடங்களோ இல்லை. குழந்தை மருத்துவத் துறையானது இத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை அதற்குரிய சேவைகளைப் பெறுமாறு வழிகாட்டி விடுவதுடன், பெரும்பாலும் நின்றுவிடுகிறது. கட்டிளம் பருவத்தை சேர்ந்த மற்றும் வயதுவந்த ஒட்டிசம் நிலைமையுடையவர்களது அரச வைத்தியசாலை தொடர்பான அனுபவங்களும் மோசமானவையாகவே உள்ளன. ஒட்டிசத்திற்கான கௌரவமான சேவைகளை வழங்கக்கூடிய வசதியோ, அல்லது உளமருத்துவத்தின் தீவிர சிகிச்சைப்பிரிவு ஒன்றோ மூன்றாம்நிலைப் பராமரிப்பை மேற்க்கொள்ளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கூட இல்லை.
மாதவம் என்பது அரச மற்றும் தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டதன் காரணத்தினால் , அங்கு பணிபுரியும் பெரும்பாலான வளவாளர்களும், பயிற்சியாளர்களும் தொண்டு நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பின் மூலமே தமது ஊதியத்தைப் பெறுகின்றனர். அவர்களின் பணி தற்காலிகமானதாக, ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதாக இருக்கின்றது. அதன் காரணமாக, அவர்கள் தங்களது பணியைப் பாதுகாப்பற்றதாக, நிரந்தரமற்ற தன்மையுடையதாக உணர்ந்து கொள்கிறார்கள். தமது எதிர்காலம் தொடர்பான கேள்விக்குறியுடன் இருக்கும் அவர்கள் தமது தொழில்சார் தகைமைகளிலும், தொழில் வாண்மையிலும் மேம்பாடு அடைவதற்கான தேவை, ஆர்வம், அர்ப்பணிப்பு போன்றவற்றை, நிரந்தரமான தொழிலில் உள்ளவர்களைவிட மிகவும் குறைவாகவே கொண்டிருக்கின்றார்கள். அதனை விட , மாதவத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தமது ஆரம்பகால அடிப்படை அனுபவங்களைப் பெற்றதன் பின்னர், பலதரப்பட்ட காரணங்களினால் தமது வேலையை இடையே நிறுத்திக் கொள்வதும் மாதவத்தின் வளர்ச்சி பின்னடைவை ஏற்படுத்துகிறது.
மறுபுறம், இப்படியான விசேட தேவையுடைய பிள்ளைகளுக்குத் தேவைப்படும் விசேட பயிற்சிகளை அளிக்கக்கூடிய பயிற்றுவிப்பாளர்கள் எமது நாட்டில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர். அண்மைக்காலமாக, இப்படியான விசேட பயிற்சிகளை வழங்கும் துறைகள் விரிவடைந்துகொண்ட செல்கின்றது. ஆயினும், எமது சூழலில் போதுமானளவு பயிற்சி பெற்ற செயல்முறைச் சிகிச்சையாளர்கள், பேச்சு மற்றும் மொழி தொடர்பான பயிற்சியாளர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள், உளவளத் துணையாளர்கள், விசேட கல்வி வழங்குநர்கள், இயன்மருத்துவச் சிகிச்சையாளர்கள் போன்றவர்கள் போதுமான அளவு இல்லாததால், அத்தகையவர்களின் சேவைகளைப் பெறுவது என்பது மிகவும் சவாலானதாக உள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், அயல் நாடுகளில் இருந்தும், பிற நாடுகளிலிருந்தும் இவ்வாறான துணைமருத்துவத் சேவையாளர்களின் சேவையினை நலன்விரும்பிகளின் அனுசரணையோடு பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்குள்ள ஆர்வமுள்ள துணைமருத்துவத் சேவையாளர்களை, விசேட மற்றும் அனுபவமிக்க நிலையங்களுக்கு அனுப்பி, தேவைப்படும் மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள வைப்பது இன்னுமொரு வழிமுறையாகச் உள்ளது.
மாதவத்தின் சிகிச்சை முறைகளைத் தலைமை தாங்கி வழிநடத்தவும், மற்றும் அதன் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்வதற்கும் கடந்த பல வருடங்களாக ஒரேயொரு மருத்துவரே பணியாற்றி வருகின்றார். யாழ். மருத்துவபீடத்தின் பல அணிகள் மாதவத்திற்கு வருகை தந்து, அங்கு ஒட்டிசம் பற்றி கற்றறிந்து, தமது கற்கைநெறிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, மருத்துவர்களாக வெளியேறிய போதும், அதில் ஒருவர்கூடத் தமது கற்கைநெறியை முடித்தன்பிறகு தன்னார்வலர்களாகவோ, அல்லது நிரந்தர மருத்துவர்களாகவோ மாதவத்தில், இணைந்து, ஒட்டிசம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலைமைகளை உடைய குழந்தைகளுக்கு சேவை செய்ய முன்வருவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாக மனதை நெருடுகின்றது. தற்காலத்தில், நலிவுற்றவர்களுக்காகப் பணிபுரிவது என்பதும், தன்னார்வலர்களாகத் தொண்டு செய்தல் என்பதுவும் எமது சமூகத்தில் மிகவும் அரியதாக காணப்படும் விடயங்களாக அமைந்துள்ளன. இளைய தலைமுறையினர் தங்களது சமூகத்திற்குத் தேவைப்படும் சேவைகளைத் தன்னார்வத்துடன் வழங்கும் மனநிலையைப் பெறுவதற்கு, அவர்கள் சிறுவயதிலிருந்தே ஊக்கப்படுத்தப்பட வேண்டும்
பல நலன்விரும்பிகள் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தங்களது தாராள குணத்தினால் உதவிகளைப் புரிந்தும், பின்னூட்டல்கள் மற்றும் ஊக்குவிப்புக் குறிப்புகளை வழங்கியும் மாதவத்தினை வழிப்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் தம்பணியை இதனுடன் நிறுத்திக் கொள்ளக்கூடாது. அவர்கள் தமது பலம் மற்றும் செல்வாக்குகளைப் பயன்படுத்தி, இலங்கையின் சுகாதாரத்துறை, கல்வித்துறை, பல்கலைக்கழகச் சமூகம், சமூகசேவைகள் திணைக்களம் ஆகியவற்றை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டி, மாதவத்தை ஒரு சீரான வழித்தடத்துடன் கூடிய, முறைசார் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவர உதவ வேண்டும். மேலும், அவர்கள் 2017ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட வடமாகாணத்திற்குரிய ஒட்டிசம் கொள்கையில் உள்ள பரிந்துரைகளைச் செயற்திட்டமாக்கத் தேவைப்படும் அழுத்தங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். மாதவத்திற்கென ஒதுக்கப்பட்ட அரச காணியில் மாதவத்தை நன்றாகத் திட்டமிடப்பட்ட ஒரு நிறுவனமாக நிலைநிறுத்த ஆவன செய்யவேண்டும். அதன் பின்னர், மாதவத்தின் பிரத்தியேக தேவைகளைப் பூர்த்திசெய்து, அதனை ஒரு தனித்துவமான, தன்னிச்சையான, தேசியச் சொத்தாக மாற்ற வேண்டும். அது என் கனா மட்டுமல்ல. அது எம் அனைவரினதும் கனாவாக இருக்கின்றது.
பேராசிரியர் திருநாவுக்கரசு குமணன் பொதுமருத்துவ நிபுணர்