ஆட்டிசம் என்பது குழந்தைகளின் விருத்தியில் ஏற்படும் மாறுபாடான ஒரு நிலைமை ஆகும். இந்நிலையின் முக்கிய இயல்புகளாகக் குழந்தைகளின் சமூக நடத்தை மற்றும் தொடர்பாடலில் ஏற்படும் பின்னடைவுகள், மற்றும் ஒரு குறிப்பிட்ட நடத்தைகளை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டுதல் போன்றவற்றைக் கொள்ளலாம். ஆட்டிசத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் பிறப்பிலேயே உருவாகின்றன என்றபோதிலும், பொதுவாகப் பிள்ளைகள் வளர்ந்து வருகின்றபோதே அதன் குணக்குறிகள் வெளியே புலப்பட ஆரம்பிக்கும்.
ஆட்டிச நிலையை முன்கூட்டியே கண்டறிவதன் மூலமும், அதற்குத் தேவைப்படுகின்ற தகுந்த பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலமும் இந்நிலைமையின் காரணமாக ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளைத் தடுக்கக்கூடியதாக இருக்கும். அத்தோடு, ஆட்டிசமானது ஒவ்வொரு குழந்தையிலும் பல வகைப்பட்ட அறிகுறிகள் வெவ்வேறு அளவுகளில் வெளிப்படுத்தப்படுகின்ற ஒரு நிலைமையாக இருப்பதனால், அவை தொடர்பாகத் தக்க நேரத்தில், தகுந்த முன்னாய்வு பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம்:
-
-
ஆரம்ப தலையீடுகள்: ஆட்டிசமுடைய ஒரு குழந்தைக்கான ஆதரவு மற்றும் தலையீடுகள் எவ்வளவு வேளைக்குக் கிடைக்கின்றதோ, அந்த அளவிற்கு அந்தப் பிள்ளையினது விருத்தி தொடர்பான நல்விளைவுகள் மேம்பட்டவையாக அமைந்துவிடுகின்றன.
-
செம்மையான முன்னேற்றம்: நேரகாலத்தோடு சிகிச்சை பெறுகின்ற குழந்தைகள், தமது மொழித்திறன், சமூகக் கற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் விருத்தியில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை அடைகிறார்கள்.
-
குடும்பத்தினருக்கான வழிகாட்டல்: முன்னாய்வு பரிசோதனைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் நிச்சயமற்ற மனநிலை மற்றும் kd அழுத்தங்களைக் குறைக்க உதவுவதோடு, அவர்களுக்குத் தேவைப்படும் வழிகாட்டல்கள் மற்றும் வளங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்குகின்றன.
-
முன்னாய்வு பரிசோதனை: ஆரம்ப நிலையில் அடையாளங் காணுதல்
இலங்கையின் சுகாதார சேவைக்கட்டமைப்பைப் பொறுத்தவரையில், ஒரு குழந்தையின் விருத்தி தொடர்பான கண்காணிப்பு என்பது ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு ஆரம்ப சுகாதார மருத்துவப் பிரிவிலும், அங்கு கடமையாற்றும் பொது சுகாதாரப் பணியாளர்கள் குழந்தைகளின் விருத்தி தொடர்பாகக் கணிப்பிடும் திறன்களைக் கொண்டிருப்பார்கள்.
ஆட்டிசத்தின் ஆரம்ப அறிகுறிகளாக ஒரு குழந்தையின் விருத்திப் படிநிலைகளில் அவதானிக்கப்படும் கீழ்க்காணும் இயல்புகளைக் குறிப்பிடலாம்:
1.சமூகத் தொடர்பாடல் மற்றும் இடைவினைகள்
-
குறைவான கண்தொடர்பு: குழந்தையுடனான தொடர்பாடலின்போது, அக்குழந்தை தொடர்பாடபவரின் கண்களை நோக்காது விடலாம்.
-
பெயருக்கு எதிர்வினை இல்லாமை: 9 முதல் 12 மாதங்களில் குழந்தையின் பேரைக் கூப்பிடும்போது, அந்த குழந்தை அதற்கு எதிர்வினை ஆற்றாது, தனது பேரைக் கூப்பிட்டது கேட்காதது போலிருத்தல்.
-
கூட்டுக் கவனம் அல்லது சேர்ந்து கவனிக்கும் திறன் அற்று இருத்தல்: ஒரு பொருளைச் சுட்டிக்காட்டும் போது அதை நோக்காதிருத்தல், அல்லது அதில் ஈடுபாடற்றிருத்தல்.
-
கை அசைவுகள் இன்மை: கைதட்டுதல், ஒன்றை அடைவதற்காகக் கைநீட்டுதல், அல்லது கை அசைத்தல் போன்ற செயல்பாடுகள் இல்லாதிருத்தல் அல்லது அவை மிகவும் குறைவாகவிருத்தல்.
-
மற்றவர்களைக் கணக்கெடுக்காதிருத்தல்: முகம் பார்த்துச் சிரிப்பது குறைவாகவிருத்தல் அல்லது இல்லாதிருத்தல், கட்டியணைக்கும் போது அதனை விரும்பாதிருத்தல், மற்றவர்களுடன் பழகுவதன் மூலம் ஏற்படும் ஓர் இதமான உணர்வைப் பெறும் விருப்பம் அற்றவர்களாக இருத்தல்.
-
ஒன்றைப் போல் பாவனை செய்தல் குறைவாக இருத்தல்: மற்றவர்களுடைய முகபாவனை, ஒலியெழுப்பல் மற்றும் செயல்பாடுகளைப் பிரதிபலித்து அவற்றைப்போல் திருப்பிச் செய்யாது இருத்தல்.
-
தனியே விளையாடுதல்: சாதாரணாமாக ஒரு குழந்தை இரண்டு மூன்று வயதளவில் ஏனையவர்களுடன் இணைந்து விளையாடும், மற்றும் கற்பனை செய்து விளையாடும் இயல்புகளைப் பெற்றுவிடுகிறது. ஆனால், ஆட்டிசம் உடைய ஒரு குழந்தையானது அரிதாகவே கற்பனை செய்து விளையாடும். அத்துடன் பெரும்பாலும் இக்குழந்தைகள் தாமாகவே தனியே விளையாடுவார்கள்.
2. பேச்சு மற்றும் மொழித்திறன் விருத்தி
-
9 மாதங்களாகியும் மழலைச் சொற்கள் அற்றிருத்தல்.
-
16 மாதங்களாகியும் அர்த்தமுள்ள சொற்களைக் கூற முடியாclub இருத்தல்.
-
இரண்டு வயதாகியும் இரண்டு சொற்கள் அடங்கிய சொற்றொடர்களைக் கூறமுடியாது, அல்லது மூன்று வயதில் மூன்று சொற்கள் அடங்கிய வாக்கியங்களைப் பேசமுடியாது இருத்தல்.
-
கதைக்கின்றபோது, அசாதாரணமான குரலில், உரப்பில், அல்லது சந்தத்தில் கதைத்தல்.
-
சமூக இடைவினைகளுக்காக உரையாடும்போது, பேச்சுமொழியை மிகக் குறைந்தளவில் உபயோகித்தல். சில சொற்களை அவர்கள் உச்சரிக்கலாம். ஆனால், அவை தொடர்பாடலில் பெரிய பங்கினை வகிக்காது.
-
தொடர்பாடும் நோக்கின்றிச் சில சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருத்தல்.
-
ஓர் உரையாடலை ஆரம்பிப்பதில், அல்லது அதனைக் கொண்டுசெல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளல்.
-
தமது தேவைகளையும், விருப்பங்களையும் கேட்டுப்பெறுவதில் இடர்பாடுகளைக் கொண்டிருத்தல்.
-
எளிமையான வாக்கியங்களையோ, அல்லது கேள்விகளையோ புரிந்து கொள்ளாது இருத்தல்.
3.ஒரே விதமான நடத்தைகள் மற்றும் குறைந்த அளவிலான ஆர்வங்கள்
- கைகளை விசிறல், உடலை முன்பின் அசைத்தல், தன்னைத்தானே சுற்றுதல் போன்ற ஒரேவிதமான நடத்தைகளை அடிக்கடி அல்லது தொடர்ச்சியாக மேற்கொள்ளல்.
- குறிப்பிட்ட சில பொருட்களோடு, அல்லது விளையாட்டுப் பொருட்களின் ஒரு சில பகுதியோடு மாத்திரம் நிலையான விருப்போடு இருத்தல். உதாரணமாக, ரப்பர் பேண்ட், திறப்புகள், சுழல்கின்ற சில்லுகள், அசைகின்ற மின் ஆழிகள் போன்றவற்றில் அதீத ஈடுபாட்டைக் காட்டுதல்.
- விடயங்கள் திரும்பத் திரும்ப ஒரேவிதமாய், ஒரே ஒழுங்கில், ஒரே மாதிரி நடைபெறவேண்டுமென விரும்புதல். தமது வழக்கமான விடயங்களில் அல்லது சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களை எதிர்த்தல் அல்லது அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளச் சிரமப்படுதல்.
- சிலவகையான புலனுணர்வுகளுக்கு அசாதாரணமான ஆர்வத்தை அல்லது எதிர்வினைகளைக் காட்டுதல். விளையாட்டுப் பொருட்களை நுகர்ந்து கொண்டிருத்தல், சிலவகையான ஒலிகளுக்கு, ஆடை இழைகளுக்கு, அல்லது உணவு வகைகளுக்கு வெறுப்பை வெளிக்காட்டுதல். சாதாரண சத்தம் குறைந்த ஒலிகளுக்குக் காதை மூடுதல் போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம்.
- தமக்கு விருப்பமான அல்லது தமக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்ற ஒரு விடயத்தில் அளவுக்குஅதிகம் மூழ்கியிருத்தல். அவை பொதுவாக எண்கள் மற்றும் அடையாளக் குறிகளைக் கொண்டிருக்கின்ற விடயங்களாக இருக்கலாம்.
- தாறுமாறான நடத்தைகள், அசாதாரணமான உடல்நிலைகள், வித்தியாசமான அசைவுகள் போன்றவற்றை வெளிக்காட்டல்.
- சுழல்கின்ற விடயங்களால் கவரப்படல். உதாரணமாக, சுற்றிச்சுழலும் சில்லுகள், சுழலும் காற்றாடிகள் போன்றவற்றில் அதீத ஈடுபாட்டைக் காட்டுதல்
4.பொதுவாக அவதானிக்கப்படும் ஏனைய இயல்புகள்
-
மற்றவர்களின் உணர்வுகள் என்ன? அவர்கள் எதைச் சொல்ல வருகிறார்கள்? என்பவை பற்றி உணர்ந்து கொள்ளாதிருத்தல். மற்றையவர்களின் செயல்பாடுகள் மற்றும் விருப்பு வெறுப்புகளை விளங்காதிருத்தல். மற்றவர்களின் சந்தோஷம் மற்றும் கவலை பற்றி கவனமெடுக்காது இருத்தல்.
-
தமது மன உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாது இருத்தல். அதனால், தேவைக்கதிகமாக அழுதல், மற்றவர்களை அடித்தல், கடித்தல், அல்லது காயப்படுத்துதல், தன்னுடைய தலையைத் தானே அடித்துக் கொள்ளல், மயிர்களை இழுத்தல், தன்னைத்தானே கடித்தல் போன்ற செயல்பாடுகளை வெளிக்காட்டுதல்.
-
கையை கண்முன் வைத்து விளையாடுதல், தன்னைத்தானே சுற்றுதல், முன்பின்னாக அல்லது மேல்நிகழாக அசைதல்.
-
விளையாட்டுப் பொருட்களை ஏதாவது ஓர் ஒழுங்குமுறையில், உதாரணமாக சிறியதிலிருந்து பெரியது வரை அடுக்குதல்.
-
தமது அன்றாடச் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகின்ற வேளைகளில் அளவுக்கு அதிகமாகக் கோபத்தை வெளிக்காட்டல்.

இந்த அறிகுறிகளைக் கவனித்தால் என்ன செய்ய வேண்டும்?
-
வைத்தியரிடம் ஆலோசனை பெறவும்: தாமதிக்க வேண்டாம். உங்கள் குழந்தைகள்நல வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். M-CHAT-R போன்ற முன்னாய்வு உபகரணங்கள் ஆட்டிசம் இருப்பதற்கான இடர்தகவைக் கண்டறிய உதவும்.
-
குழந்தையின் விருத்தியை மதிப்பீடு செய்யவும்: ஒரு குழந்தை விருத்திசார் வைத்திய நிபுணர், ஒரு சிறுவர் உளவியலாளர், அல்லது ஓர் ஆரம்ப இடைப்பீட்டுச் சேவை மூலம் உங்கள் குழந்தையின் விருத்தி நிலையை மதிப்பீடு செய்யுமாறு உங்கள் குழந்தைகள்நல வைத்திய நிபுணர் பரிந்துரை செய்யலாம்.
ஒரு நோய்நிர்ணயத்திற்காகக் காத்திருக்க வேண்டாம்: ஆட்டிசம் இருக்கின்றது என்பதனை முறையாக உறுதி செய்வதற்கு முன்பே, தேவைப்படும் ஆரம்பப் பயிற்சித் திட்டங்களைத் தொடங்குவது அவசியமானது.
முன்னாய்வு மருத்துவப் பரிசோதனைகளின் சவால்கள்
ஆட்டிசத்தை அடையாளம் காண்பதற்கான முன்னாய்வு உபகரணங்கள் மற்றும் அதற்கான வழிகாட்டல்கள் இருந்தபோதிலும், ஆட்டிசத்தை ஆரம்ப கட்டங்களில் அடையாளம் காண்பதில் நாம் பல சவால்களை எதிர்கொள்கின்றோம்:
-
பயிற்சி பெற்ற நிபுணர்களின் பற்றாக்குறை: விருத்திசார் குழந்தைநல வைத்திய நிபுணர்கள், குழந்தை உளவியலாளர்கள், பேச்சு மற்றும் மொழி தொடர்பான சிகிச்சையாளர்கள், செயல்முறைச் சிகிச்சையாளர்கள் போன்ற பயிற்சி பெற்ற துறைசார் விற்பன்னர்களின் பற்றாக்குறை நாடு முழுவதும், குறிப்பாக தலைநகரிலிருந்து தூர இருக்கின்ற இடங்களில், காணப்படுகின்றது.
-
நகர்ப்புற கிராமப்புற பாகுபாடு: பெரும்பாலான சேவை வழங்கும் நிலையங்கள் பெருநகரங்களில் மட்டுமே உள்ளன, இதனால் தொலைதூரப் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்குத் தேவைப்படும் சேவைகள் கிடைப்பது கடினமாகிறது.
-
சமூகக் களங்கம்: ஆட்டிசம் தொடர்பாக எமது பகுதிகளில் இருக்கின்ற களங்க மனப்பான்மையானது ஆட்டிசத்திற்கான முன்னாய்வு பரிசோதனைகளையும், தேவைப்படும் ஆரம்ப கட்ட உதவிகளைப் பெறுவதனையும் தடுக்கின்றது.
-
முன்னிலைப்படுத்தும் அறிகுறிகளில் வேறுபாடு: ஆட்டிசத்தின் அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தையிலும் வித்தியாசமாக வெளிப்படுத்தப்படுவதனால், நியமமாக உபயோகிக்கப்படும் முன்னாய்வு பரிசோதனைகள் சிலவேளைகளில் சரியான பேறுகளைத் தராது விடலாம்.
-
பண்பாடு, சமூக, மற்றும் பொருளாதாரம்சார் தடைகள்: சில சமூகங்களில் சுகாதார சேவைகளை அணுகல் என்பது மிகவும் குறைவான ஒரு நடைமுறையாக இருக்கலாம். அதனால் ஆட்டிசத்தை ஆரம்ப காலத்தில் கண்டறிதல் என்பது சாத்தியமற்றுப் போகலாம்.
-
தவறான பேறுகள்: முன்னாய்வு பரிசோதனை உபகரணங்கள் நோய்நிர்ணயத்திற்கானவை அல்ல. சில சமயங்களில் அவை ஆட்டிச இயல்புகள் இருக்கின்றனவா? இல்லையா? என்பதனைத் துல்லியமாக அடையாளம் காணத் தவறுகின்றன.
-
பெற்றோர் விழிப்புணர்வு பெறுதலும், பங்கேற்றலும்: முன்னாய்வு பரிசோதனைகள் பெரும்பாலும் பெற்றோர்கள் கூறும் தகவல்களின் அடிப்படையிலேயே நடைபெறுவதனால், குழந்தையின் வளர்ச்சி மற்றும் விருத்தி தொடர்பான பெற்றோர்களின் அறிவும், பார்வைகளும் முன்னாய்வு பரிசோதனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன.
ஆட்டிசத்திற்கான முன்னாய்வு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளல் என்பது குழந்தை மருத்துவத்தின் முக்கியமான ஒரு பகுதியாகும். இது ஆட்டிசத்தை ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காண்பதையும், தக்க நேரத்தில் தேவையான பயிற்சிகள் மற்றும் இடைடீடுகள் கிடைப்பதனையும் உறுதி செய்கின்றது. பொதுவாக முன்னாய்வு பரிசோதனைகள் ஆட்டிசம் இருக்கின்றது என்ற நிர்ணயத்தைச் செய்யாவிட்டாலும், அவை அடிப்படையில் ஆட்டிசம் இருக்கலாம் என்ற சந்தேகமுடைய பிள்ளைகளை அடையாளங்காண உதவுகின்றன.
சமூகத்தில் ஆட்டிசத்திற்கான முன்னாய்வு பரிசோதனைகள் அனைவருக்கும் எளிதாகக் கிடைப்பதனையும், அந்தப் பரிசோதனை உபகரணங்களின் துல்லியம் மேம்பாடு அடைவதனையும், பொதுமக்களது விழிப்புணர்வு அதிகரிப்பதனையும் உறுதிப்படுத்தும் தொடர்செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. அவை ஆட்டிசம் உடைய குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குச் சிறந்த விளைவுகளைத் தந்துிற்கும்.
பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ்
குழந்தைநல வைத்திய நிபுணர்
குழந்தை விருத்தி சம்பந்தமான பாய்வு நிரல் படம்
