ஓட்டிசமும் தொடர்பாடல் திறன்களும்

  • Post published:June 18, 2019
  • Post comments:0 Comments

ஓட்டிசம் பிள்ளைகளைப் பொறுத்தவரை, அவர்களது பெற்றோரது முக்கிய கவலையாகக் காணப்படுவது பிள்ளைகளின் தொடர்பாடல், பேச்சு மற்றும் மொழி விருத்தி பற்றிய விடயங்களாகும். “எனது பிள்ளையால் கதைக்க முடியவில்லை”,“அவர் தனக்குத் தேவையானதைக் கேட்கிறாரில்லை”, “நிறையச் சொற்களைச் சொல்லுறார், ஆனால் இரண்டு சொற்களைச் சேர்த்துக் கதைப்பதில்லை” “தன்ரபாட்டில கதைக்கிறார் ஆனால் நாங்கள் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லுறாரில்லை”, “அர்த்தமில்லாமல் சும்மா ஏதோ கதைக்கிறா” “சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுறார்” போன்ற பல்வேறுபட்ட முறைப்பாடுகளைப் பெற்றோர் முன்வைப்பதனை நாம்  சாதாரணமாக அவதானிக்கலாம்.

ஓட்டிசம் என்பதனை பிள்ளைகளின் சமூக ஊடாட்டம், புலன்வாங்கல் வினைத்திறன், தொடர்பாடல் திறன், மொழியாற்றல், ஆர்வம், நடத்தைகள் தொடர்பாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் மூளை மற்றும் நரம்புசார் விருத்திகளில் ஏறபடுகின்ற ஒரு குறைபாடாக நோக்கலாம். இந்தக் குறைபாடானது வெவ்வேறு பிள்ளைகளில் வெவ்வேறு அளவூகளில் காணப்படுவதனால் ஓட்டிசம் நிலைமையூடைய ஒவ்வொரு பிள்ளையூம் சில பொதுவான ,யல்புகளோடு, பல தனித்துவமான இயல்புகளையூம் கொண்டிருப்பதனை நாம் காணலாம்.

ஓட்டிசம் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அனைவரும் பொதுவாகத் தமது தொடர்பாடல் திறன்களில் குறைபாடுகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலருக்கு ஆரம்பத்தில் மொழிவெளிப்பாடு (பேச்சு) உரியகாலத்தில் விருத்தியடைத் தொடங்கினாலும், சிலமாதங்களின் பின்பு அது மெல்ல மறைந்து விடுகிறது. வேறு சிலருக்கு பேசும் ஆற்றல் முழுமையாகவே விருத்தியடையாது போகலாம். காலக்கிரமத்தில், இந்த இரண்டு தரப்பினரும் சில ஒலிகளை எழுப்புவதனூடாகவும், தமது குறிப்பான நடத்தைகளினூடாகவும், அடம் பிடிப்பதனூடாகவும் தமது தொடர்பாடல்களை மேற்கொள்ள, அல்லது தேவைகளை வெளிப்படுத்த எத்தனிப்பார்கள்.

ஓட்டிசம் நிலைமையினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தமது மொழிசாராத் தொடர்பாடலிலும் குறைபாடுகளைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, இந்தப்பிள்ளைகள் மற்றவர்களது கண்களைப் பார்த்துத் தொடர்பாடும் திறன் குறைந்தவர்களாக அல்லது அத்திறன் முழுமையாக அற்றவர்களாகக் காணப்படலாம். இதுதவிர, இந்தப் பிள்ளைகள் பொருத்தமான முகபாவனை மற்றும் ஏனைய உடல்சார் மொழியினைப் பிரயோகிக்கும் திறன்களிலும் வெவ்வேறு அளவினதான குறைபாடுகளைக் கொண்டிருப்பார்கள்.

பெற்றோர்கள் ஓட்டிசம் நிலையுடைய தமது பிள்ளைகளில் தொடர்பாடல், பேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுகள் காணப்படும் என்பதனைப் புரிந்து கொள்வதும், அதனை ஏற்றுக் கொள்வதும் மிக அவசியமானதாகும். அத்துடன் தமதுபிள்ளைகள் காலப்போக்கில் கதைப்பார்கள் என எண்ணிக் காத்திருத்தலானது ஓட்டிசம் இயல்புடைய பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் பொருத்தமான ஒருதெரிவாக இருக்கமாட்டாது. ஏனெனில் இந்தக் குறைபாடுகளுக்கான தலையீடுகளை வேளைக்கே ஆரம்பித்து  மேற்கொள்ளப்படுவதென்பதே மிகவும் சிறந்தது.

 

பெற்றோர், ஓட்டிசம் நிலைமையுடைய தமது பிள்ளைகளின் பேச்சு மற்றும் மொழித் திறன்களை விருத்தி செய்வதில் ஆர்வம் காட்டும் அதேவேளை, அதற்கு அடிப்படையாகத் தேவைப்படுகின்ற ஏனைய திறன்களையூம் விருத்திசெய்வது அவசியமாகும். உதாரணமாக, அமர்ந்திருத்தல் (Sitting), கண்தொடர்பு (Eye contact), பெயருக்குப் பிரதிபலிப்பைக் காட்டுதல் (Name responding), போலச் செய்தல் (Imitation), இணை அவதானம் (Joint Attention), காத்திருத்தல் (Waiting), தனது முறைவரும் வரை பொறுமைகாத்துச் செயற்படல் (Turn taking) போன்ற பல்வேறு அடிப்படைத் திறன்கள் விருத்தி செய்யப்படும் பொழுது மொழி மற்றும் பேச்சுத் திறன்களின் விருத்திக்கான பயிற்சிகளை அளிப்பது சுலபமானதாகவிருக்கும். இந்த விடயங்கள் தொடர்பாக மேலதிக விளக்கங்கள் தேவைப்படும் பெற்றோர், ஓட்டிசம் உடைய பிள்ளைகளோடு பணிபுரியும், அனுபவமுள்ள சிகிச்சையாளர்களை அல்லது மாதவத்துடன் தொடர்புகொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுவாக, பெற்றோர் ஓட்டிச நிலைமையூடைய தமது பிள்ளைகளின் பேச்சு மற்றும் ஏனைய தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்வதற்குக் கீழே குறிப்பிடப்படும் 4S நுட்பத்தினைக் கடைப்பிடிப்பது பயன்தரும்.

  • Simple
  • Stress
  • Show
  • Slow

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் உரையாடும்போது இயலுமானவரை குறைவான எண்ணிக்கையில், தௌிவாகப் புரிந்து கொள்ளத்தக்கதானசொற்களைப் பாவித்து உரையாடுவது முக்கியமானதாகும்.

அவ்வாறு உரையாடும் பொழுது பெற்றோர்கள் தாம் பயன்படுத்தும் சொற்களை மிக அழுத்தமாக உச்சரிப்பது அவசியமாகும். இது, பெற்றோரால் பேசப்படுகின்ற சொற்களைப் பிள்ளைகள் இலகுவாக விளங்கிக் கொள்வதற்கும், அவற்றைக் கற்றுக் கொண்டு மீளவெளிப்படுத்துவதற்கும் இலகுவாக அமையும்.

பிள்ளையுடன் ஒரு பொருளைப் பற்றியோ, அல்லது ஒரு விடயத்தைப் பற்றியோ கதைக்கும்போது, முடியுமானளவு அவற்றைத் தொட்டுக் காட்டியோ, அவற்றை விபரிக்கும் படங்களைப் பயன்படுத்தியோ, அவற்றைச்சுட்டிக் காட்டியோ சொல்லிக் கொடுத்தல் வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகத் தாம் என்ன சொல்கின்றோம் என்பதனை,அப்பிள்ளைகள் விளங்கிக் கொள்ளும் வகையில், மிகவும் ஆறுதலாகப் பேசுதல் வேண்டும்.

 

மேலே குறிப்பிட்டவற்றை விட, பிள்ளைகளின் பேச்சுமற்றும் மொழிவிருத்திக்காக, பெற்றோரால் பயன்படுத்தக்கூடிய மேலும் சிலஉத்திகள் கீழே விபரிக்கப்படுகின்றன.

ஒரு பிள்ளை உரையாடலை மேற்கொள்ளும்போது அல்லது அதற்கு முயற்சிக்கும் போது, பிள்ளையின் பேச்சுத் தௌிவின்மையைக் கருத்திற்கொள்ளாது, அப்பிள்ளையினால் வெளிப்படுத்தப்படும் விடயத்திற்கு முக்கியத்துவமளித்து அப்பிள்ளையைப் பாராட்ட வேண்டும்.

பிள்ளைகளுடன் கதைக்கும்போது,பொருத்தமான உடல் மொழிகளையும் முகபாவனையையும் சேர்த்துக்கொண்டுகதைப்பதன் மூலம், பிள்ளைகள் மொழிசாரத் தொடர்பாடல் திறன்களை விளங்கிக் கொள்வதற்கு வழிசமைக்கும்.

பிள்ளைகளைச் சுற்றியுள்ள வினையாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களைப் பற்றிக் கதைத்தல் வேண்டும். இதன் மூலம் பிள்ளைகள் தாம் அன்றாடம் கையாளும் பொருட்களின் மொழிவடிவங்களைக் கற்றுக் கொள்வார்கள்.

எப்போதும் பிள்ளைகள் கதைப்பதற்குரிய சந்தர்ப்பங்களை வழங்குதல் அவசியமானதாகும். பெற்றோர் பிள்ளைகள் தொடர்பாடுவதற்குரிய சந்தர்ப்பங்களை வழங்கி, அவர்கள் தமது உரையாடலை மேற்கொள்ளும் வரை காத்திருத்தல் மிகவும்முக்கியமானதாகும்.

பிள்ளைகள் தமது நாளாந்த செயற்பாடுகளை செய்வதற்கு ஊக்கமளிப்பதோடு, அவர்களது நாளாந்த செயற்பாடுகளை உள்ளடக்கிய காட்சி அட்டவணையொன்றைத் தயாரித்து காட்சிப்படுத்துவது முக்கியமானதாகும். ஏனெனில், இது அவர்களது நாளாந்த செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதுடன் வாய்மொழி மூலமான தொடர்பாடலையூம் தூண்டுகிறது.

பிள்ளைகள் ஒரு சொல்லை அல்லது ஒரு சில சொற்களை மட்டும் பாவித்து உரையாடலை மேற்கொள்கின்றதெனில், அச் சொற்களை அடிப்படையதாகக் கொண்டு அவர்களின் உரையாடலை மேலும் வளர்த்து, படிப்படியாக வசனங்களாக்கிப் பேசுதலை ஊக்குவிக்க முடியும்.

பிள்ளைகளுக்கு மிகவும் விருப்பமான பொருட்களை (சாப்பாடு, விளையாட்டுப் பொருட்கள் போன்றவைற்றை) பிள்ளைகளுக்குத் தெரியக் கூடியவாறு, ஆனால் அவர்களுக்கு எட்டாத இடத்தில் அல்லது இன்னொருவரது உதவியுடன் மட்டுமே எடுக்கக் கூடியவாறு வைத்துக் கொண்டு, பின்பு, பிள்ளைகள் தமது விருப்பத்திற்குரிய அந்தப் பொருட்களை எடுத்துத் தருமாறு உங்களைக் கேட்பதற்கு, வேண்டுகோள் விடுப்பதற்குப் பழக்கக் கூடியதாக இருக்கும்.

நிறையப் படங்கள் உள்ள கதைப் புத்தகங்களைப் பிள்ளைகளுக்குக் காட்டியபடி, இலகுவான மொழி நடைகளைப் பாவித்தும் பொருத்தமான முகபாவனைகள் மற்றும் உடல் மொழிகளை உபயோகித்தும் கதை சொல்ல வேண்டும். இவ்வாறு கூறுவதன் மூலம் பிள்ளையின் செவிமடுத்தல் திறனையும்,கவனத்தை ஒருமுகப்படுத்தும் தன்மையையும் அதிகரிக்கமுடியும்.

 

வாய்மொழி மூலம் தொடர்பாட முடியாத பிள்ளைகள்

சில வேளைகளில் எந்த விதமான சொற்களையும் சொல்ல முடியாத அளவுக்குத் தமது பேச்சு மற்றும் மொழியாற்றலில் குறைபாடுடைய பிள்ளைகளையும் நாம் காணலாம். ஆயினும், இவர்களில் அநேகமானவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதனைப் புரிந்துகொள்ளும் திறன் காணப்படும், பிள்ளைகள் நாம் கூறுவதைப் புரிந்துகொண்டாலும், அவர்களால் பதில்களை வழங்க முடியாது போகலாம். இதன் காரணமாக அவர்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் மனச்சலிப்பையும் உணர்ந்து கொள்வார்கள். இவை பின்பு வெவ்வெறு விதமான நடத்தைகளாக, சிலவேளைகளில் பிரச்சினையாகிப் போகின்றநடத்தைகளாகவெளிப்படுத்தப்படுகின்றன. இந்தவிதமானபிள்ளைகளுக்குமாற்றுத் தொடர்பாடல் முறைகளைஅறிமுகப்படுத்துதல் பிரயோசனமானதாக இருக்கும். பிள்ளைகள் சைகைகளைப் பயன்படுத்தியோ அல்லதுபடங்களை உபயோகித்தோ, அல்லது பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மென்பொருட்களை உபயோகித்தோ தமது தொடர்பாடலை மேற்கொள்வதற்குப் பழக்குதல் தேவையானது. பிள்ளைகளின் தொடர்பாடலை இலகுவாக்கும் பொழுது அவர்களில் மொழிமற்றும் பேச்சுத் திறன்களை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளை அளிப்பதுவும் இலகுவாகிவிடும். மேலும், இது அவர்களது நடத்தைப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும். இந்தவிடயம் தொடர்பான மேலதிக விளக்கங்களையும், பாவிக்கக் கூடிய உத்திகளையும்  பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

 

எமது நாட்டில் ஓட்டிசம் தொடர்பான விழிப்புணர்வும், அதற்கான சேவை வழங்கல்களும் தற்பொழுது படிப்படியாக வளர்ந்துவருகின்றன. ஆயினும், ஓட்டிசம் உடைய பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் அப்பிள்ளைகளின் பெற்றோர்களே மிகவூம் சிறந்த வளவாளர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் ஓட்டிசம் பற்றி நிறையஅறிந்து கொள்வதும், தம் பொறுப்புணர்ந்து தம் பிள்ளைகளுக்குப் பொருத்தமான  இடையீடுகளைமேற்கொள்வதும், தமதுஅனுபவங்களைக் கலந்துபேசி, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது.

Leave a Reply